‘இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில், இதுபற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய நோய் வந்தால், அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்துவிடுகிறோம். ‘வலி’யை உணரும்போதுதான் பலரும் விழித்துக்கொள்கிறோம்.
‘இந்தியாவில் மட்டுமே, 50 வயதைக் கடந்தவர்கள் 25 சதவிகிதமும் 40 வயதைத் தாண்டியவர்கள் 15 சதவிகிதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கின்றனர் மருத்துவர்கள். வந்த பின்னர் அவதிப்படுவதைவிட, வருவதற்கு முன்னரே காத்துக்கொள்வது இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியமானது.
இதய நோய் வராமல் தடுப்பதற்கு, சில எளிய வழிமுறைகளை அரசு இதயவியல் மருத்துவர் ஆனந்த்ராஜாவிடம் கேட்டோம்.

அலுவலகப் பிரச்னையை எப்படி வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாதோ, அதேபோல், படுக்கைக்கும் பிரச்னைகளைக் கொண்டுசெல்லக்கூடாது. தூங்கும்போது எதைப் பற்றியும் நினைக்கக்கூடாது. அது இரவு தூக்கத்தைப் பாதிப்பதுடன், மனதளவில் நமக்கும் தூக்கத்துக்குமான இடைவெளியைப் பெரிதுபடுத்திவிடும். உணவு உண்ட பின் உடனே படுக்கைக்குச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சராசரியாகத் தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் மிக அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், புகைபிடிக்காமை, மது அருந்தாமை, இவற்றுடன் தூக்க நேரத்தையும் சரியாகப் பின்பற்றினால், இதய நோய் 90 சதவிகிதம் நெருங்க வாய்ப்பே இல்லை.
மாரடைப்புக்கும் சிரிப்புக்கும் மறைமுகமான, அதே சமயம் நெருங்கிய தொடர்பு உண்டு. ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புக்கட்டி வெடித்து, ரத்தம் உறைந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறையும்போது மாரடைப்பு ஏற்படும். மனம் விட்டுச் சிரிக்கும்போது, நம் உடலில் நன்மை பயக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்கட்டிகளை வெடிக்கவிடாமல் செய்துவிடும். அதனால், இனி வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நம்மில் பலரும் சுகவாசிகள்தான். விரும்பிய நேரத்தில் சாப்பாடு, வேண்டிய இடத்துக்குச் செல்ல வாகனம், மிதமிஞ்சிய ஓய்வு என ஒருவரது வாழ்க்கையின் முன் பாதி கழிந்தால், நோய் தாக்கிய உடலுடன் மருத்துவமனையில் அல்லாடும் நிலை அவரது வாழ்வின் பின்பாதி இருக்கும். இயந்திரமயமான உலகில் கால்களுக்கு வேலை கொடுப்பதை மறந்து நிறுத்திவிட்டோம். காலையில் எழுந்தவுடன் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். உணவுக்குப் பின் நடைப்பயிற்சி செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உலகிலேயே இந்தியர்கள்தான் சுவைக்கு முக்கியம் தருவதில் முன்னணியில் இருக்கின்றனர். பிடிக்காத உணவை ஓரங்கட்டியும், பிடித்ததை அதிகமாக வயிற்றில் கட்டியும் அவதிப்படும் பழக்கத்துக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இது மிகவும் தவறு. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2,500 கலோரிகள் உடல் இயக்கத்துக்குத் தேவை. இந்த அளவைத் தாண்டி உடலில் சேரும் கலோரிகள், கொழுப்பாக ரத்தத்தில் கலக்கின்றன.

அதற்காக, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டியது இல்லை. மாறாக, அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. ‘கீரை மற்றும் காய்கறிகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இதய நோய் உண்டாகும் வாய்ப்பு மிகக் குறைவு’ என்கின்றன சர்வதேச ஆய்வுகள்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
க்ளிக் செய்யவும் https://bit.ly/VikatanWAChannel