திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை என்றும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிக்கின்றனர் என்றும் அதிமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் அ.இ.அ.தி.மு. க கிழக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது . இதில் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய சி.வி. சண்முகம், “ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைக்காகப் போராடுகிற இயக்கமாக அதிமுக. அதிமுகவில் தலைவர்கள் பிறந்தநாள் என்றால் மக்களுக்கு எதையாவது செய்வோம்.

ஆனால் திமுக போன்ற கட்சிகள் வசூலிக்கும் கட்சியாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகின்றது இந்த நான்கு வருடங்களில் பால், மின்சாரம், சிமெண்ட், ஜல்லி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. ஆனால் கூலித் தொழிலாளர்களின் கூலி உயரவில்லை. வீட்டிற்குப் பயன்படுத்துகிற குடிநீருக்கான வரியும், மதுவின் விலையும்தான் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
“திமுக ஆட்சியின் சாதனை விலைவாசி உயர்வு. ஊழல் தான் மலிந்திருக்கிறது. எதைக் கேட்டாலும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். தாலிக்குத் தங்கம், லேப்டாப் திட்டம் போன்ற அதிமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிக்கின்றனர். பெண்களுக்கு இலவச பயணத்தைக் கொடுத்துவிட்டு ஓசில போறாங்கனு சொல்லும் நிலை உள்ளது. அரசு பேருந்துகள் அனைத்தும் மழையில் ஒழுகுகிறது. திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel