இந்தியாவிடம் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீரர் எங்களது அணியில் இல்லை – பாக்.முன்னாள் வீரர்

கராச்சி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.

இதில் இன்று நடைபெறுகின்ற 5-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடியும் சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார். –

அந்த வகையில் அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியை ஒப்பிடும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. அதற்கு காரணம் இந்திய அணியில் அதிகப்படியான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச் வின்னர் என்பவர் ஆட்டத்தில் தனியாக நின்று அணியை வெற்றி பெற வைப்பவர். அப்படிப்பட்ட ஒரு வீரர் பாகிஸ்தான் அணியில் இல்லை” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.