வாஷிங்டன்: இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பணம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாட்டில் பேசிய அதிபர் ட்ரம்ப், “இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக 18 மில்லியன் டாலர்கள். எதற்காக இது எல்லாம்? நாம் நமது பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஏன் செல்லக்கூடாது? பின்பு அவர்களின் தேர்தல்களால் நமக்கு உதவட்டும். சரிதானே. வாக்காளர் அடையாள அட்டை. அது நன்றாக இருக்குமில்லையா? இந்தியத் தேர்தலுக்காக நாம் பணம் கொடுத்துள்ளோம் அது அவர்தளுக்கு தேவையில்லாதது.
அவர்கள் நம்மிடம் அதிக உரிமைகளை எடுத்துக்கொள்கிறார்கள். உலகிலேயே அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. நமக்கு அங்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பிறகும் நாம் அவர்களின் தேர்தலுக்கு உதவுவதற்காக வேறு பணம் கொடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தால் USAID-ன் கீழ் இந்தியாவில் வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த உதவி குறித்து இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் நிதியுதவி குறித்து அங்கிருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. மத்திய அரசு அது குறித்து விசாரித்து வருகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்க நிதியுதவி இங்கு அனுமதிக்கப்பட்டது. அமெரிக்கா நிதி வரலாற்று ரீதியாகவே இங்கே இருந்து வருகிறது. ஆனால் நல்ல நோக்கத்துக்காக, நல்ல நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிதியுதவி இங்கே அனுமதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் இருந்து தீய நோக்கங்களுடன் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே நிச்சயமாக அதுகுறித்து நாம் ஆராய வேண்டும்” என்றார்.
இந்நிலையில், தனது வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ரன்திர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள், அமைப்புகள் விசாரித்து வருகின்றன” என்று தெரிவித்தார்.