PAK v IND: `ஸ்பின்னர்களை வைத்து பாகிஸ்தானை அடக்கிய இந்தியா' – இந்த ஸ்கோர் எளிய இலக்கா?

சாம்பியன்ஸ் டிராபியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் அணி 241 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. முதல் இன்னிங்ஸ் எப்படியிருந்தது? இந்திய பௌலர்கள் பாகிஸ்தானை எப்படி கட்டுப்படுத்தினர்?

India vs Pakistan

டாஸை வென்ற பாகிஸ்தான்:

துபாயில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தான் டாஸை வென்றார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாகவும் அறிவித்தார். வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் 220+ டார்கெட்டை சேஸ் செய்யவே இந்திய அணி 46 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டது. போட்டி செல்ல செல்ல பிட்ச் மந்தமாவதை உணர முடிகிறது. மேலும், துபாயில் காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இல்லை என்றும் இந்திய அணியின் துணை கேப்டன் கில் பேசியிருந்தார். இந்த காரணங்களால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்திருக்கக் கூடும்.

ஒயிடில் தொடங்கிய ஆட்டம்:

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஷமியும் ஹர்ஷித் ராணாவும் முதல் ஸ்பெல்லை வீசினர். இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் ஓப்பனர்கள். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து முதல் ஓவரை இமாமுக்கு வீச ஷமி கொஞ்சம் சிரமமே பட்டிருந்தார். அந்த ஓவரில் மட்டும் 5 ஒயிடுகள். மேலும், ஐந்தாவது ஓவரை வீசுகையில் முழங்காலில் அசௌகரியத்தை உணர்ந்தவர் பெவிலியனுக்கும் திரும்பினார். இதனால் முதல் ஸ்பெல் கொஞ்சம் சீக்கிரமாகவே முடிந்தது. ஹர்திக் பாண்ட்யா பந்தைக் கையில் எடுத்தார். இமாமும் பாபரும் நின்று நிதானமாக ஆடும் மனநிலையிலேயே இருந்தனர். பாபருக்கு பந்து சரியாக கனெக்ட்டும் ஆகவில்லை. இப்படியொரு நிலையில் அவர் 23 ரன்களில் இருந்த போது ஹர்திக்கை ட்ரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி ராகுலிடம் கேட்ச் ஆனார்.

Rizwan & Saud

அவர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே இமாம் உல் ஹக்கும் ரன்னே இல்லாத இடத்தில் ரன் ஓட முயன்று அக்சர் படேலால் டைரக்ட் ஹிட்டாக அவுட் ஆக்கப்பட்டார். இமாம் உல் ஹக் 10 ரன்கள் அடித்திருந்தார். இமாம் உல் ஹக்கையும் இன்சமாம் உல் ஹக்கையும் ரன் ஓடுவதில் ஒப்பிட்டு ரவி சாஸ்திரியும் கவாஸ்கரும் நகைச்சுவை செய்துகொண்டிருந்தனர்.

நிதானித்த ரிஸ்வான் – சவுத் சகீல் கூட்டணி:

47-2 என பாகிஸ்தான் திணறிய போது ரிஸ்வானும் சவுத் சகீலும் கூட்டணி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி ரொம்பவே நிதானமாக ஆடியது. அக்சர், ஜடேஜா, குல்தீப் இந்திய ஸ்பின் பட்டாளத்துக்கு எதிராக நிறைய டாட்களை ஆடி கொஞ்சம் நேரம் களத்தில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய ஆரம்பித்தனர். ஏதுவான பந்துகளை பவுண்டரி ஆக்கினர். நிதானமான ஆட்டத்தால் இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. ரொம்பவே நிதானமாக ஆடிக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் கியரை மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது இருவருமே சிக்கிக்கொண்டனர். அக்சரின் பந்தில் இறங்கி வந்து பெரிய ஷாட்டை ஆட முயன்று ரிஸ்வான் 46 ரன்களில் போல்டை பறிகொடுத்தார்.

Axar

கொஞ்ச நேரத்திலேயே சவுத் சகீல் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஹர்திக்கின் பந்தில் அக்சரிடம் 62 ரன்களில் கேட்ச் ஆனார். திடகாத்திரம் இல்லாத லோயர் மிடில் ஆர்டரை வைத்திருக்கையில் இருவருமே இன்னும் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருக்க வேண்டும். மேலும், இருவருக்குமே இந்திய வீரர்கள் கேட்ச் ட்ராப்களை செய்திருந்தனர். அந்த வாய்ப்பையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இந்தியாவுக்கான சவால்:

இந்திய ஸ்பின்னர்கள் பேட்டர்களுக்கு இடம் கொடுக்காமல் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக டைட்டாக வீசிக் கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் பேட்டர்கள் ரொம்பவே திணறினர். சல்மான் ஆகாவையும் ஷாகின் ஷா அப்ரிடியையும் அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் வீழ்த்திக் கொடுத்தார். தயாப் தாஹீரை ஜடேஜா போல்ட் ஆக்கினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது. ஆயினும், கடைசியில் குஷ்தில் ஷா அதிரடியாக ஆடினார். இன்னிங்ஸின் முதல் சிக்சரையும் அவர்தான் அடித்திருந்தார். ஷமியின் 49 வது ஓவரிலும் பெரிய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணாவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கி முயன்று 38 ரன்களில் அவுட்டும் ஆனார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Kuldeep

சராசரியான டார்கெட்டாக தெரிந்தாலும் துபாய் மைதானத்தில் இந்த ஸ்கோரை சௌகரியமாக எடுப்பது கொஞ்சம் கடினம்தான். இந்தியாவுக்கு சவால் காத்திருக்கிறது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.