ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணய கைதி; பின்னணி என்ன? விவரிக்கும் வீடியோ

காசா முனை,

இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இதனிடையே, முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் தங்கள் வசம் உள்ள மேலும் 6 பணய கைதிகளை நேற்று விடுவித்தது. அப்போது, இஸ்ரேலிய பணய கைதி ஒமர் ஷெம் டம் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2 பேருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அறிவுறுத்தலிலேயே ஒமர் ஷெம் டம் முத்தம் கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது.

விடுதலை செய்யப்படுவதற்குமுன் ஒமர் ஷெம் டம் மேடையில் ஏற்றப்பட்டுள்ளார். அப்போது, அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த நபர், ஒமர் ஷெம் டம் இடம் சென்று அருகில் நின்றுகொண்டிருக்கும் ஆயுதக்குழுவினர் நெற்றியில் முத்தமிடும்படி கூறுவது போன்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த அந்நபர், சக ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடமும் இது குறித்து கூறியுள்ளார். இதன்பின்னர், சில வினாடிகள் கழித்து தனது இடதுபுறம் நின்றுகொண்டிருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2 பேரின் நெற்றியில் ஒமர் ஷெம் டம் முத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த 2 ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் கூடியிருந்த பாலஸ்தீனியர்களை நோக்கி கைகளை தூக்கி உற்சாகப்படுத்தினர்.

ஆனால், ஒமர் ஷெம் டம் தாமாக முன்வந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நெற்றியில் முத்தமிட்டதாக சித்தரிக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வீடியோக்கள் பரவி வருகின்றன. வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த நபரின் அறிவுறுத்தலின் பெயரிலேயே ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.