வாடிகன்: ‘‘தீவிர சிகிச்சைக்குப்பின் கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அமைதியான இரவை கழித்தார் போப் பிரான்சிஸ்’’ என வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்(88) சுவாச பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு அதிக அழுத்த ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.
ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. இந்த சிகிச்சைக்குப் பின் கடந்த சனிக்கிழமை அன்று மருத்தவமனையில் போப் பிரான்சிஸ் அமைதியான இரவை கழித்தார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ்க்கு இளம் வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுவிட்டது. அவருக்கு ஆஸ்துமா பாதிப்பும் இருந்து வந்தது. ‘‘போப் பிரான்சிஸ்க்கு அளிக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்க சில நாட்கள் ஆகும். வயது முதிர்வு, ஏற்கெனவே இருந்த நுரையீரல் பாதிப்பு ஆகியவை காரணமாக அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் உள்ளது’’ என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் செர்ஜியோ அல்பெரி தெரிவித்துள்ளார்.