சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி

கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாடு தாராசுரத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக் குழுத் தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்றார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வாழ்த்துரையாற்றினார்.

இதில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி பேசியது: ஏழ்மை, அறியாமை, மது போதைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்துத் தரப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி கணகெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தவறான தகவலைத் தெரிவிக்கிறார். எனவே, அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணகெடுப்பு அவசியம். இது தொடர்பான எங்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். சாதியை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. இவ்வாறு அன்புமணி பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 364 சாதிகளும் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும். ஏற்றதாழ்வுகளைக் களைய சாதிவாரி கணகெடுப்பு நடத்த வேண்டும். ஆந்திராவில் பிற்படுத்தபட்டோருக்கு வேலைவாய்ப்பு, கடனுதவி திட்டங்கள் உள்ளன.

தமிழகத்தில் 3 முறை சாதிவாரி கணகெடுப்பு நடத்த வாய்ப்புக் கிடைத்தும், சிலரின் சதியால் அது நடைபெறவில்லை. சாதிவாரி கணகெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? தமிழகத்தில் 6.50 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை. 2026-ம் தேர்தலின்போது தெளிவு பிறந்து விடும். மது இல்லாவிட்டால் வேலைவாய்ப்பு அதிகரித்து, சமுதாய நல்லிணக்கம் பெருகும். இவ்வாறு அவர் பேசினார். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மதி.விமல் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.