மகா கும்பமேளா குறித்து இணையத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரித்து சில சமூக வலைதள பக்கங்கள் வீடியோக்களை வெளியிட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமூக வலைதளங்களை உத்தர பிரதேச சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மகா கும்பமேளா தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகா கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 26ஆம் தேதியுடன் மகா கும்பமேளா நிறைவடைவதை முன்னிட்டு அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
62 கோடி பக்தர்கள்: மகா கும்பமேளாவுக்கு இதுவரை 62 கோடி பக்தர்கள் வந்துள்ளனர் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். “உலகில் எந்த நிகழ்வுக்கும், இந்த அளவுக்கு மக்கள் வந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வுகளில் மகா கும்பமேளாவும் ஒன்று. இது மக்களை தங்களின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் மீண்டும் இணைவதற்கான தொடர்பை ஏற்படுத்தும்.” என்று யோகி ஆதித்யநாத் கூறினார்