India vs Pakistan Highlights: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப். 24) மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து இந்திய அணி (Team India) அரையிறுதி இடத்தை உறுதிசெய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் குரூப் சுற்றோடு வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது அந்நாட்டு ரசிகர்களிடையேவும், முன்னாள் வீரர்களிடையேவும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
IND vs PAK: இனி பாகிஸ்தான் ரசிகர்கள் டிவி உடைக்க மாட்டார்கள்
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் பாகிஸ்தானில் தற்போது நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் (Team Pakistan) அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் குரூப் சுற்றோடு வெளியேறுவது அவர்களின் கிரிக்கெட் ஆரோக்கியமற்றதாக இருப்பதை உறுதிசெய்கிறது எனலாம். மேலும், போட்டி தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி (Basith Ali) கூறியிருந்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.
அவர் கூறியதாவது,”முன்பை போல் இந்தியாவுடன் தோற்றால், பாகிஸ்தான் ரசிகர்கள் யாரும், தொலைக்காட்சியை போட்டு உடைக்க மாட்டார்கள், பொருளாதார சூழலும் மோசமாக இருக்கிறது. மேலும், 80% பாகிஸ்தான் ரசிகர்களுக்கே இந்தியா தான் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையே இருக்கிறது” என பேசியிருந்தார். இதன்மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் மீது அந்நாட்டு ரசிகர்கள் எந்தளவிற்கு அதிருப்தியை கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
IND vs PAK: வாசிம் அக்ரம் காட்டம்
போட்டி தொடங்கும் முன்னரே கருத்துகள் அனல் பறந்த சூழலில், பாகிஸ்தான் தோல்வியடைந்த பின்னர் அவர்களின் மூத்த வீரர்கள் இன்னும் படுபயங்கரமான கருத்துக்களையும் உதிர்த்திருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
DP World Dressing Room என்ற நேற்றைய போட்டி குறித்த நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் (Wasim Akram),”பாகிஸ்தானின் மோசமான அணுகுமுறையால் முதல் இன்னிங்ஸிலேயே அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இந்திய அணி முதல் பவர்பிளேவில் 11 பவுண்டரிகளை அடித்தது. ஆனால், பாகிஸ்தானோ 20 ஓவர்களில் தான் 11வது பவுண்டரியையே அடித்தது. அங்கேயே போட்டி முடிந்துவிட்டது. அணித் தேர்வுக்குழுவும் என்ன யோசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை, குஷ்தில் ஷா மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோரின் சுழற்பந்துவீச்சில் தரமான வீரர்களை வீழ்த்தி விடலாம் என நினைக்கிறார்களா…?” என காட்டமாக பேசியிருந்தார்.
IND vs PAK: வறுத்தெடுத்த வக்கார் யூனிஸ்
அதே நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் (Waqar Younis),”பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது. ஆனால் போதுமான ரன்களை அடிக்கவில்லை. போதுமான ரன்கள் எடுக்காதபோது இதுதான் நடக்கும், நீங்கள் அதீத முயற்சிகளை எடுக்குறீர்கள். பந்துவீச்சில் ஒழுக்கம் தேவை. இந்திய பந்து வீச்சாளர்கள் ஒழுக்கமாக பந்துவீசினர் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சு மோசமாக இருந்தது.
என்ன தவறு நடந்தது என்பதை விளக்குவது கடினம். இன்று பாபர் நன்றாக தொடங்கினார். அவர் அவுட் ஆனவுடன், ரிஸ்வான் உள்ளே சென்றார், முதல் பந்து அதிரடியாக ஒரு பவுண்டரி, அதில் ஒரு நோக்கம் இருந்தது. பாகிஸ்தான் ஒரு நல்ல ஸ்கோரை எட்டும் என்று தோன்றியது. எனக்கு உண்மையில் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்” என பேசியிருந்தார்.
IND vs PAK: ஆக்ரோஷம் ஆன ஷாயப் அக்தர்
இதையடுத்து, ஷாயப் அக்தர் (Shoiab Akthar) X தளத்தில் பேசி வெளியிட்ட தனி வீடியோவில் பாகிஸ்தான் அணியையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் கிழித்தெடுத்தார். அதில்,”இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் நான் சிறிதும் ஏமாற்றமடையவில்லை. ஏனென்றால் என்ன நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். நீங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களை கொண்டு மட்டும் விளையாட முடியாது. அனைத்து ஆறு தரமான பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறது. நீங்கள் இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் செல்கிறீர்கள். மூளையற்ற மற்றும் அறியாமை கொண்ட நிர்வாகம் இது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
குழந்தைகளை (பாகிஸ்தான் வீரர்கள்) குறை சொல்ல முடியாது; வீரர்களும் அணி நிர்வாகத்தைப் போலவே இருக்கிறார்கள்! அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நோக்கம் வேறு விஷயம், அவர்களிடம் ரோஹித், விராட் மற்றும் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இல்லை. அவர்களுக்கும் எதுவும் தெரியாது, நிர்வாகத்திற்கும் தெரியாது. அவர்கள் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் விளையாடச் சென்றுவிட்டார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாருக்குமே தெரியாது” என்றார்.