மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் மகா கும்பமேளாவில் புனித நீராட மும்பை முதல் பிரயாக்ராஜ் வரை லிப்ட் கேட்டு ஓசி பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது வாலிபர் திவ்ய ஃபபோனி. மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்ல விரும்பினார். இந்தியர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்பதால், லிப்ட் கேட்டு பிரயாக்ராஜ் வரை செல்ல முடிவு செய்தார். ‘லிப்ட்’ என எழுதப்பட்ட பதாகை ஒன்றை மட்டும் கையில் வைத்துக் கொண்டு கடந்த 12-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டார். பைக், ஸ்கூட்டர், கார், லாரி என ஒவ்வொரு வாகனமாக வழிமறித்தார்.
மும்பையிலிருந்து தானே வழியாக நாக்பூர், மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் வரை பல வாகனங்களில் லிப்ட் கேட்டு 1,500 கி.மீ தூரத்தை எளிதாக கடந்துவிட்டார். ஜபல்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை லாரிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் இவரது லிப்ட் பயணம் சற்று கடினமானது. ஆனாலும் உள்ளூர் நபர்களின் உதவியுடன் லிப்ட் பயணத்திலேயே 2 நாளில் மும்பையிலிருந்து பிரயாக்ராஜ் வந்தடைந்தார்.
இவர் தனது பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் எனது அனுபவம் அற்புதமானது. மும்பையிலிருந்து பிரயாக்ராஜ் வரை லிப்ட் மூலம் பயணம் செய்ய பலர் தயக்கமின்றி உதவினர். இந்தியர்களின் இரக்க குணம், வியக்கத்தகு ஒற்றுமைதான் நமது நாட்டை ஒன்றிணைக்கிறது என அவர் தனது பயணம் பற்றி பெருமையாக குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட்டை இது வரை 36,000-க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.