கைத்தறித்துறை அமைச்சரும் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளருமான ஆர்.காந்திக்கும், மூத்த அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய ஆதரவாளரும் ராணிப்பேட்டை மாவட்டப் பொருளாளருமான ஏ.வி.சாரதிக்கும் இடையே வெளிப்படையான மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி, துணை முதலமைச்சர் உதயநிதியின் குட் புக்கிலும் இடம் பிடித்துவிட்டாராம் ஏ.வி.சாரதி. அமைப்பு ரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் எனப் பிரிக்கப்பட்டு வரும் வேளையில், ராணிப்பேட்டை மாவட்டமும் பிரிக்கப்பட்டால் சாரதிக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி பேசப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், பிப்ரவரி 23-ம் தேதியான நேற்றைய தினம், ஆற்காடு பகுதியிலுள்ள அலுவலகத்தில் சாரதி தனது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடினார். `சாரதிக்கு வாழ்த்துகள் தெரிவிக்க யாரும் போகக் கூடாது’ என அமைச்சர் காந்தி கட்சியினரிடம் கடுகடுத்து உத்தரவுப் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என நிர்வாகிகள் பலரும் சாரதியின் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் போன் மூலமாகவே வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனராம்.
இதையறிந்த அமைச்சர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் உட்பட முக்கிய, முன்னணி தலைவர்கள் சாரதியின் அலுவலகத்துக்கே நேரில் சென்று `சர்ப்ரைஸ்’ கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். `பொதுச்செயலாளரே நேரில் செல்வார்’ என எதிர்பார்க்காத ராணிப்பேட்டை காந்தி `ஷாக்’ ஆகி கலக்கமடைந்துவிட்டாராம்.

“துறை ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் வரிசைக் கட்டும் சூழலில், காந்திக்கு செக் வைப்பதற்காக உதயநிதி தரப்பால் ராணிப்பேட்டையில் முன்னிறுத்தப்படுகிறார் சாரதி. தனது ஆதரவாளர் என்பதால், பொதுச் செயலாளர் துரைமுருகனும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து சாரதியை மாவட்ட அரசியலில் வளர்த்துவிடுகிறார். சமீபத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாரதி சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படமும் வெளியாகி காந்தி தரப்பை கடுமையாக அப்செட் ஆக வைத்தது’’ என்கின்றனர் ராணிப்பேட்டை மாவட்ட ஆளுங்கட்சியினர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
