‘சச்சின்’ இளமை துள்ளல், காமெடி கலாட்டா, கலர்ஃபுல் காதல் என விஜய் அடித்து ஆடிய வின்னிங் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லி’ யைப்போல, ரீ-ரிலீஸ் ஆகப்போவதால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், ‘சச்சின்’ படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரனிடம் பேசினேன்…
“சச்சின் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், மரண மாஸ் வெயிட்டிங்குன்னு ஒவ்வொருத்தரும் பயங்கர எதிர்பார்ப்போடு கமென்ட் பன்றாங்க. எல்லா புகழும் நிச்சயமா விஜய்க்குத்தான் சேரும். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ன்னு தொடர்ச்சியா ஆக்ஷன் படங்கள் பண்ணிக்கிட்டிருந்தார். அதிலிருந்து கொஞ்சம் சேஞ்ச் ஆகி ஒரு லவ் படம் பண்ணனும்னு அவருக்கும் விருப்பம் இருந்திருக்கு. தாணு சார்க்கிட்ட, ‘சச்சின்’ கதையைச் சொன்னப்போ ‘விஜய் ஆக்ஷன் படங்கள் பண்ணிக்கிட்டிருக்கார். இப்போ அவருக்கு செட் ஆகுமா?’ன்னு கேட்டார். அப்புறம், தாணு சாரே ஒருநாள் விஜய்க்கிட்ட அனுப்பி வெச்சார்.
அப்போ, விஜய் அடையார்ல இருந்தார். மூணு மணிக்கு கதை சொல்லப்போனேன். போறதுக்கு முன்னாடி, நிறைய பேர் என்கிட்ட அவர்க்கிட்ட கதை சொல்றதுக்கு சுவத்துக்கு முன்னாடி கதை சொல்லி பிராக்டீஸ் பண்ணிட்டு போங்க. ஏன்னா, எந்த எக்ஸ்பிரஷனும் கொடுக்கமாட்டார்ன்னு கிண்டலா சொன்னாங்க. அதேமாதிரி, விஜய் ரொம்ப கோபப்படுவார். அவர்க்கிட்ட ரொம்ப தன்மையா நடந்துக்கோங்கன்னு சொல்லி கூட்டிக்கிட்டு போனாங்க.
நான், விஜய்யைப் பார்த்தவுடனேயே கைக்கொடுத்து ‘எப்படி இருக்கீங்க விஜய்?’ன்னு நலம் விசாரிச்சேன். கூட இருந்தவங்க, அவரை பேரை விட்டு கூப்பிட்டதுக்கும் நானே முதலில் கையை கொடுத்ததுக்கும் ஒரு மாதிரி பேசினாங்க. ‘சார்ங்கிறது ஒரு மாதிரி டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ற மாதிரி இருக்கு. நீங்க என்னைவிட வயசுல சின்னவர்தானே? உங்களை பேர் விட்டு கூப்பிட்டுக்கவா’ன்னு அவர்க்கிட்டேயே கேட்டேன். ‘பரவாயில்ல, என்னைவிட பெரியவர்தானே? தாராளமா பேரைவிட்டு கூப்பிட்டுக்கோங்க அண்ணா’ன்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம், கதையை சொல்ல ஆரம்பிச்சேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு சிரிக்கிறார் சிரிக்கிறார் சிரிச்சுக்கிட்டே இருக்கார். விழுந்து விழுந்து சிரிக்கிறார். அப்படியொரு சிரிப்பு. பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுட்டாங்க. விஜய்க்கு ‘சச்சின்’ கதை பிடிக்கும்ங்கிற நம்பிக்கையோட போனேன். அவருக்கும் பிடிச்சிடுச்சு.
அதேமாதிரி, வடிவேலு சார்க்காக ட்ராக் எல்லாம் எழுதிக்கிட்டு போயிருந்தேன். அதையெல்லாம், கேட்டுட்டு வடிவேலு சார்க்கு டேட் இருக்கா? அவரைத் தவிர இந்த ரோலில் வேற யாரும் பெர்பெக்டா பண்ணமுடியாதுன்னு சொன்னார். அவரோட டேட் கிடைக்குமில்லன்னு ஆர்வமா கேட்டார். எல்லாரும் விஜய்ன்னா இப்படித்தான் இருப்பார்ன்னு ஒரு பிம்பத்தை அவங்க அவங்க மனசுக்குள்ள கட்டமைச்சு வெச்சிருக்காங்க. ஆனா, விஜய் பிம்பங்களுக்கு அப்பாற்பட்டவர். ரொம்ப இயல்பா பழகினார். அவர்க்கிட்டேயிருந்து இப்படிப்பட்ட எக்ஸ்பிரஷன்கள் வரும்னு யாருமே எதிர்பார்க்கவே இல்ல. ஷூட்டிங் ஸ்பாட்டுல சீன் சொல்லும்போது கையை எல்லாம் ஆட்டி, அசைச்சு சொன்னேன். நீங்களே ஒவ்வொரு சீனுக்கும் நடிச்சு காட்டிடுங்கன்னு சொன்னார்.
இந்தப் படத்துல பைக்மேல உட்கார்ந்திருக்கிற சீன் நான் பண்ணிக் காட்டினதுதான். பெரும்பாலான காட்சிகளை நான் நடிச்சுக்காட்டின பிறகுதான், அதை அப்படியே பார்த்து ரொம்ப அட்டகாசமா பண்ணினார். கதை, திரைக்கதையைவிட ‘சச்சின்’ என்கிற கேர்க்டர் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
விஜய்க்கிட்ட இயல்பாகவே காமெடி சென்ஸ் உண்டு. இந்தப் படம் காமெடி கலந்த லவ் படம்ங்கிறதால ரொம்ப க்யூட்டா காமெடியில கலக்கியிருப்பார். வடிவேலுவுக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு காமெடி பண்ணியிருப்பார். வடிவேலுக்கும் அவருக்குமான பல காமெடி ட்ராக்குகள் அவருக்கு புடிச்சிருந்ததாலதான் ஓகே பண்ணினார்.
காதல் சப்ஜெக்ட் என்பதால் மழை, குளிர், பனின்னு படம் முழுக்க அழகியலா இருக்கணும்னு ஊட்டியில ஷூட் பண்ணினோம். படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஜீவாதான் இந்தக் காட்சிகளுக்கெல்லாம் உயிர் கொடுத்தார். காதல் காட்சிகளில் இதயம் ஜில்லுனு ஆகி, அந்த குளு குளு உணர்வை மக்களுக்கும் அப்படியே ட்ரான்ஸ்ஃபார்ம் பண்ணனும்னு நினைச்சோம். அது, அப்படியே சக்சஸ் ஆனது.

ஊட்டியில ஷூட் பண்ணினதால கேரவன் வைக்கமுடியாத சூழல். திடீர் திடீர்னு மேகமூட்டம் அதிகமாகி பனி படர்ந்து, காஸ்ட்யூம் கலரையே கேமராவில் வேற மாதிரி காட்டும். இந்த கலர் செட் ஆகலை. இந்த ட்ரெஸ்ஸை மாற்றணும்னு சொன்னா, ஒரு குடையை வெச்சு மறைச்சுக்கிட்டு உடனே ஷர்ட், டி-ஷர்ட் சேஞ்ச் பண்ணிடுவார். பேண்ட் மாற்றணும்னா கார்லயே உட்கார்ந்து மாற்றிடுவார். அந்தளவுக்கு, ஷூட்டிங்குல அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டார்.
பொதுவா, ஷூட்டிங் ஸ்பாட்டுல விஜய் இப்படித்தான்னு பலர் சொல்வாங்க. உண்மை அது கிடையாது. அவருக்கு பிடிச்சிருந்தா, எல்லா ரூல்ஸையும் பிரேக் பண்ணுவார். ஆறு மணிக்கு மேல நடிக்கமாட்டார். நைட் ஷூட் பண்ணமாட்டார்ன்னு எல்லாரும் சொல்வாங்க. ஆனா, அப்படி அவர் ஸ்ட்ரிக்ட்டாவே இருந்ததில்ல. ஷூட்டிங் ஸ்பாட்டே ரொம்ப ஜாலியா இருக்கும். இரவு, பகல் பாராம நடிச்சுக்கொடுத்தார்.
ஜெனிலியா வட இந்தியா. ஆனா, இந்தப் படத்துல தமிழ் ரொம்ப நல்லா பேசுவாங்க. எந்த நேரமும் சீன்ஸ் பேப்பரை கையில வச்சுக்கிட்டு படிச்சுக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப சின்சியர். நாளைக்கு என்ன எக்ஸாமா இருக்கு? இந்தளவுக்கு படிச்சுக்கிட்டிருக்கன்னு ஜெனிலியாவை விஜய் செம்மையா கிண்டலடிப்பார். ஜெனிலியா ரொம்ப டேடிகேட்டட்” என்று பகிர்ந்துகொண்டவரிடம், “அப்பா மகேந்திரன் இந்தப் படம் பற்றி அப்போ என்ன சொன்னார்?” என்று கேட்டேன்.
“அப்பாவுக்கு இந்தப் படம், ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆனா, பிபாஷா பாசுவை எதுக்குத் தேவையில்லாம திணிக்கணும்? தேவையில்லாத ட்ராக்கா இருக்கேன்னு சொன்னார். அதுமட்டும்தான், அவர் முரண்பட்டார். மற்றபடி, படம் பார்த்துட்டு பாராட்டினார்” என்றவரிடம், “சச்சின் விமர்சன ரீதியா ஹிட். ஆனா, வசூல் ரீதியா பின்னடைவுன்னு சொல்லப்படுதே? ஒரு படைப்பாளியா உங்களுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டபோது, “அப்பாவோட ‘ஜானி’ படத்தை எடுத்துக்கோங்க. ரஜினி சார்க்கிட்ட வேற எதையோ எதிர்பார்த்துக்கிட்டு மக்கள் தியேட்டர் வந்திருந்தாங்க. என்ன இது முழுக்க லவ் படமா இருக்கேன்னு ஜெர்க் ஆகிட்டாங்க. ஆனா, இன்னைக்கும் ‘ஜானி’ தமிழ் சினிமாவுல முக்கியமான காதல் படமா தனிச்சு நிற்குது. அதேமாதிரிதான், ‘சச்சின்’ படமும்.
கதையா இருக்கட்டும், விஜய் நடிப்பா இருக்கட்டும், வடிவேலு காமெடியா இருக்கட்டும், காதல் காட்சிகளா இருக்கட்டும், விஷுவலா இருக்கட்டும் இன்னைக்குப் பார்த்தாலும் அதே ஃப்ரெஷ்னெஸ்ஸோட இருக்கு. அதுதான், இந்த படத்தோட வெற்றியா பார்க்கிறேன்” என்றவர், விஜய் சார்க்கிட்ட ஷூட்டிங் ஸ்பாட்டுல மறக்கமுடியாத சம்பவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். “க்ளைமாக்ஸ் ஷூட் கோயம்புத்தூர் விமனா நிலையத்துல எடுத்தோம். அப்போவே, நிறைய காலேஜ் பொண்ணுங்க போட்டோ எடுக்க குவிஞ்சுட்டாங்க. ரெண்டு நாள் ஷூட்டிங் முடிச்சுட்டு, விடியற்காலையில் ஃப்ளைட். ஆனாலும், ஒன்றரை மணிவரை பேசிக்கிட்டிருந்தோம்.
அப்புறம், தூங்க போயிட்டோம் திடீர்ன்னு ரெண்டு பொண்ணுங்க, விஜய் சாரை பார்க்க வந்திருக்காங்கன்னு மேனேஜர் வந்து சொன்னார். இந்த நேரத்துல பார்ப்பாரான்னு தெரியலைன்னு சொன்னேன். ஆனா, அந்த பொண்ணு ஹாஸ்பிடலில் உடம்பு சரியில்லாம இருந்த சூழலில் அண்ணனை பார்க்கணும்னு ரொம்ப பாசமா சொல்லிச்சு. அந்த சூழலிலும் வந்து பார்த்த விஜய், ரெண்டரை மணிவரைக்கும் பேசிக்கிட்டுப் போனார். அதை, பெரிய விஷயமா பார்க்குறேன். அது மறக்கவே முடியாது” என்று நினைவுகளில் மூழ்கியவரிடம் கடைசியாக “விஜய் அரசியலுக்கு வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?” என்றோம்,
“அவரோட சம்பளம் எவ்ளோங்குறது ஓபன் சீக்ரெட். எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு உண்மையிலேயே மக்கள் சேவை செய்யத்தான் வர்றாரு. நிச்சயமா அரசியலிலும் சாதிப்பார்” என்கிறார் அழுத்தமாக.
சச்சின் படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சியை கமென்ட் பண்ணுங்க
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel