உலகில் மனிதர்கள் பார்த்து அச்சப்படும் பறவைகள் மிகச் சிலதான். அதில் நிச்சயமாக கஸ்ஸோவரி (Cassowary) பறவையும் இடம்பெறும்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை எனப் பெயர் பெற்றுள்ள இந்த பறவை, ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது.
அழகும் ஆபத்தும் ஒன்றாகவே இருக்கும் எனச் சொல்லப்படுவதற்கு ஏற்றபடி இந்த பறவை அழகானதாக இருக்கிறது. அதன் பிரகாசமான நீல நிற முகம், ஹெல்மெட் அணிந்ததைப் போன்ற கொண்டை, கூரான நகங்கள் இதனை இரண்டுக்குமானதாக மாற்றியிருக்கின்றன.
வளர்ந்த மனிதன் அளவு உயரமான இந்த பறவை 310 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
பப்புவா நியூ கினியாவில் கஸ்ஸோவரிஸ் பறவைகளைப் பற்றி 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆண்ட்ரூ மேக் என்பவர் சி.என்.என் செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில், “இவை வாழும் டைனோசர்களைப் போல இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

பொதுவாக இந்த பறவைகள் கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் மனிதர்கள் முன் தோன்றாது. அதே நேரம் மிகவும் வெறித்தனமாக கோபப்படக் கூடியது. இதைக் கண்டறிவது கடினமான காரியம். ஒருவேளை அதை நெருங்கினால் மிக அரிதாக தாக்கவும் கூடும். அதனால் தாக்கப்பட்டால் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.
310 கிலோ எடையுள்ள பறவையால் பறக்க முடியுமா? நிச்சயமாக இல்லை! ஆனால் அதன் வலுவான கால்கள் வேகமாக ஓட உதவும்.
இவை மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. தரையில் மட்டுமல்ல தண்ணீரிலும் இவை அதிவேகமாக நீந்தும்.
தானா சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை இவை விடுவதில்லை என்பதுபோல, இந்த பறவை 7 அடி உயரத்துக்கு குதித்து ஒரே மிதியில் எதிரியை வீழ்த்திவிடும் வலிமை கொண்டவை. அது எந்த மிருகமாக இருந்தாலும் தன் நகத்தால் கீறி குடலை சரித்துவிடும்.

என்னதான் வலிமையானதாகவும், பெரிதாகவும் இருந்தாலும் ‘கஸ்ஸோவரி பறவைகள் தாக்கி இறந்த மனிதர்களை விட மனிதர்களால் கொல்லப்பட்ட கஸ்ஸோவரி பறவைகளின் எண்ணிக்கை அதிகம்’ என்கிறார் இந்த பறவைகளை பாதுகாக்கும் அமைப்பை நிறுவிய பீட்டர் ரோவ்லெஸ்.
ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நீங்கள் இந்த பறவையை எதிர்கொள்ள நேர்ந்தால் (அது அதிர்ஷ்டம்தான்) உங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு அசையாமல் இருக்கவும், கடுகளவு கூட அந்த பறவையின் பார்வையை கவராமல் இருக்க வேண்டும். கைகளை அசைப்பது, கத்துவது கூடாது. நிதானமாக ஒரு மரத்தின் பின்னால் ஒழிந்துகொண்டு அது செல்லும் வரை காத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சில பழங்குடியினர் கலாசாரத்தில் இந்த பறவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவர்களின் சடங்குகள், நடனங்கள் மற்றும் கதைகளில் இந்த பறவை இடம் பெற்றுள்ளது.