பாகல்பூர் (பிஹார்): பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
19-வது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பிஹார் மாநிலம் பாகல்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவிப்பதாக அறிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து இன்று விவசாயிகளுக்கான 19-வது தவணையை விடுவித்துள்ளோம். பிஎம் கிசான் நிதி திட்டம், விவசாயிகளுக்கு ‘மரியாதை, வளர்ச்சி, செழுமை மற்றும் புதிய பலம்’ ஆகியவற்றை அளித்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சியில் வேளாண் துறை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதுவரை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.3.5 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதித்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை, சிறு விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. இதனால் அவர்களது செலவுகள் குறைந்து, வருமானம் அதிகரித்து வருகிறது” என்று அவர் கூறினார்.
9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் விடுவித்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.