புதுச்சேரி: விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு இன்று (பிப்.24) துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், புதுவை வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த ஜனவரியில் விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்து. ஆனால், பணிகள் முடிவடையாமல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு கிளம்பியதால் டோல்கேட் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுவை – விழுப்புரம் இடையே கெங்கராம்பாளையத்தில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் கிராமவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் சிக்னல்கள் சிறிது நேரம் சரியாக வேலை செய்யவில்லை. வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கார்கள் ஒருமுறை செல்ல 60 ரூபாயும் (ஒரே நாளில் இருமுறைக்கு 90), இலகுரக வணிக வாகனங்கள் செல்ல 95 ரூபாயும் (ஒரே நாளில் இரண்டு முறைக்கு 145), இரண்டு அச்சுகள் கொண்ட பஸ்கள் மற்றும் டிரக்குகள் செல்ல 200 ரூபாயும் (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ. 305), மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள் செல்ல 220 ரூபாயும் (இருமுறை செல்ல ரூ. 330) பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான வாகனங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல ரூபாய் 315 (ஒரே நாளில் ரூ.475) வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குற்றச்சாட்டு: பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “டோல்கேட்டில் மேற்கூரையே இல்லை. தடுப்புகளை அமைத்து கட்டணம் வசூலிக்கத் தொடக்கி விட்டனர். கழிவறை, ஓய்வறை, முதலுதவி மையம் என எதுவும் இல்லை. திருபுவனையில் சர்வீஸ் சாலை சரியாக இல்லை. திருவண்டார் கோயில் பகுதியில் உணவு கிடங்கு, பள்ளிக்கு செல்ல தனியாக பாதை அமைக்கவில்லை. பல இடங்களில் சர்வீஸ் சாலை முடிக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்,” என்று குற்றம்சாட்டினர்.