பெர்லின்: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கடந்த 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 630 இடங்கள் உள்ளன. இதில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் ஆப் ஜெர்மனி (சிடியு) மற்றும் கிறிஸ்டியன் சோசியல் யூனியன் இன் பவாரியா (சிஎஸ்யு) கட்சிகள் அடங்கிய வலதுசாரி கூட்டணி 208 அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பிரெட்ரிக் மெர்ஸ் (69) அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வலதுசாரியான ஆல்டர்நேட்டிவ் பார் ஜெர்மனி (எஎப்டி) கட்சி 152 இடங்களில் வெற்றி பெற்று 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இக்கட்சிக்கு ட்ரம்பின் நண்பர் எலான் மஸ்க் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் ஜெர்மனி 120 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியைச் சேர்ந்த ஒலாப் ஸ்கால்ஸ் பிரதமராக உள்ளார். மீதமுள்ள இடங்களில் பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலில் வலதுசாரி கூட்டணி அதிக இடங்களில் (208) வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க 316 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதனால் புதிய அரசு அமைவது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்காவைப் போலவே, ஜெர்மனி மக்களும் பல ஆண்டுகளாக நிலவி வரும் பொது அறிவு இல்லாத அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளால் சோர்வடைந்திருந்தனர். குறிப்பாக எரிசக்தி மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்நிலையில், வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான இடதுசாரி அரசின் கொள்கையை மக்கள் நிராகரித்துள்ளனர். இது ஜெர்மனிக்கு ஒரு மகத்தான நாள்.
அமெரிக்கா மீது விமர்சனம்
வலதுசாரி கூட்டணி வெற்றியை ட்ரம்ப் வரவேற்றுள்ள நிலையில், பிரதமராக பொறுப்பேற்கவுள்ள பிரெட்ரிக் மெர்ஸ் அமெரிக்காவை சாடியுள்ளார். அவர் கூறும்போது, “அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க பாடுபடுவேன். தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவிடமிருந்து மூர்க்கத்தனமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் ஜெர்மனியின் உள் விவகாரங்களில் தலையிட முயற்சிக்கிறது. இருதரப்பிலிருந்தும் நமக்கு அழுத்தம் தரப்படுகிறது. இந்த தருணத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நான் முன்னுரிமை வழங்குவேன்” என்றார்.