சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் குறைந்ததால், ஒரு கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்டத்தின் கெர்லபெண்டா கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறும்போது, “இதுவரை நங்கள் தேர்தலில் வாக்களித்ததே இல்லை. முதல் முறையாக இப்போது வாக்களித்துள்ளோம்” என்றார்.
மற்றொரு கிராமவாசி கூறும்போது, “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக வாக்களித்துள்ளோம். இதன்மூலம் எங்கள் கிராமம் இனி வளர்ச்சி அடையும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களிடம் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முதல் முறையாக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது, பீஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கிராம மக்கள் முதல் முறையாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினரை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால், அந்த அமைப்பு பலவீனமடைந்து வருகிறது. பீஜப்பூர் மாவட்டம் நேஷனல் பார்க் பகுதியில் சமீபத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 11 பெண்கள் உட்பட 31 மாவோயிஸ்ட்கள் 2 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.