அமராவதி: எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வெளிநடப்பு செய்தார்.
ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று அமராவதியில் தொடங்கியது. பேரவை, மேலவை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டத்தில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பேரவையில் நேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் பல நாட்களாக பேரவை கூட்டங்களுக்கு வராமல் இருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 11 உறுப்பினர்களும் நேற்று காலை அவைக்கு வந்தனர்.
அப்போது ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கியதும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், தனது கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், ஆளுநர் தனது உரையை படிக்க முடியாதபடி அவரை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர், ஜெகன் உட்பட 11 எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்கள் அனைவரும் பேரவையில் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே இருந்தனர்.
பவன்கல்யாண் பேச்சு: ஆளுநர் உரைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மக்கள் கொடுப்பதாகும். அதாவது ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக தொகுதி எண்ணிக்கையில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியும்.
இந்த பேரவையில் 2-வது பெரிய கட்சி ஜனசேனா கட்சி ஆகும். எங்களை விட ஒரு தொகுதியாவது இவர்கள் அதிகமாக வெற்றி பெற்றிருந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தானாக கிடைத்திருக்கும்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் வழங்காவிட்டால் பட்ஜெட் கூட்டத்தை நடக்க விட மாட்டோம் என கூறி பேரவையில் அமளியில் ஈடுபடுவது சரியில்லை. மக்கள் கொடுத்த 11 எம்.எல்.ஏக்களும் மக்களுக்கு கவுரவம் அளித்து அவைக்கு வரவேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை பேரவையில் பேச வேண்டும். ஆளும்கட்சிக்கு பிரச்சினைகளை எடுத்து கூற வேண்டும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக இங்கு பேச வேண்டும். அதுவே ஜனநாயகம். ஆனால் வெறும் 11 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமென்றால் அது முடியாது. நீங்களே மனதளவில் ‘அது நடக்காது’ என முடிவு செய்து கொண்டு பேரவைக்கு வாருங்கள். இவ்வாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்
ஷர்மிளா கேலி: இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி கோரி நடத்திய ஆர்பாட்டம் சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஷர்மிளா கூறியிருப்பதாவது:
மக்கள் ஜெகனை வெறுத்து ஓரங்கட்டினாலும் அவருக்கு தலைக்கணம் இன்னமும் குறையவில்லை. 11 எம்.எல்.ஏ.க்கள் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே பேரவையில் இருப்பதா ? இதற்குத்தான் அவர்களுக்கு மக்கள் ஓட்டு போட்டார்களா? மக்களின் உரிமைக்காக போராடுவதை விட்டு, தனது உரிமைக்காக போராடுபவர் ஒரு தலைவரா ? 60 நாட்கள் தொடர்ந்து பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் தனது அடிப்படை எம்.எல்.ஏ பதவி கூட பறிபோய் விடும் எனும் அச்சத்தால்தான் ஜெகன் நேற்று பேரவைக்கு வந்து தேவையில்லாத பிரச்சினையை கொண்டு வந்து, வெளிநடப்பு செய்துள்ளார்.
மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டுமென்றால் இவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் பேரவைக்கு வரவேண்டும். ”இல்லை… எங்களுக்கு பயம்” என கூறினால், உங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு ஷர்மிளா தெரிவித்துள்ளார்.