ஒரே இடத்​தில் 2,996 வீரர்கள் ஒருங்​கிணைந்து கராத்தே சாகசங்கள் செய்து கின்னஸ் சாதனை

சென்னை: இந்தியா முழுவதும் இருந்து 2,996 கராத்தே வீரர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து காட்டும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்.8-ம் தேதி நடைபெற்றது. இதில் கராத்தே பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உலக கராத்தே வரலாற்றில் முதல்முறையாக, கின்னஸ் உலக சாதனை புத்தக நடுவர் முன்னிலையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நிகழ்வில் பங்கேற்ற நிலையில் அதில் 2,996 பேர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு ஒருங்கிணைந்து பஞ்ச், கிக்ஸ், ப்ளாக் போன்ற கராத்தே நுட்பங்களின் சாகசங்களை சிறப்பாக செய்து காட்டி அசத்தினர்.

இந்த சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கிய கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நடுவர்கள், தொடர்ந்து கடந்த பிப்.21-ம் தேதி கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அதை பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தற்காப்புக் கலையை இலவசமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதற்காக கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த கின்னஸ் சாதனை நிகழ்வை கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து திட்டமிட்டு, தற்போது செய்து காட்டியிருக்கிறோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக அரசிடம் இருந்து பணமோ, பதவியோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசின் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ சாட்சியாளர் பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.