NzvBan : கம்பேக் கொடுத்த ரச்சின் ரவீந்திரா; அரையிறுதியை உறுதி செய்த நியூசிலாந்து அணி!

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. நியூசிலாந்து அணி எப்படி இந்த போட்டியை வென்றது?

Shanto

ராவல்பிண்டியில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில், முதல் சில ஓவர்களில் அந்த அணி விக்கெட்டை இழக்கவே இல்லை. தன்ஷித் ஹசனும் ஷாண்டோவும் சில நல்ல பவுண்டரிக்களை அடித்திருந்தனர். முதல் விக்கெட்டுக்கு 45 ரன்களை சேர்த்திருந்தனர். மேட் ஹென்றி, ஜேமிசன் என வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டவர்கள், ஸ்பின்னர்கள் வந்தவுடன் தடுமாறினர். ப்ரேஸ்வெல் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்களில் இருந்த தன்ஷித் ஹசனை வெளியேற்றினார். இந்த விக்கெட்டுக்கு பிறகு கேப்டன் ஷாண்டோ ஒரு முனையில் நின்று விட இன்னொரு முனையில் வந்த வேகத்திலேயே சிங்கிள் டிஜிட்டிலேயே அத்தனை பேரும் அவுட் ஆகி சென்றனர்.

அட்டாக்கிங்காக ஆடுவோம் என முடிவெடுத்து வந்தார்களா என தெரியவில்லை. வந்தவுடனேயே பெரிய ஷாட்களுக்கு முயன்று அவுட் ஆகினர். முஷ்பிஹர் ரஹீமெல்லாம் நிதானிக்கவே இல்லை. வந்த வேகத்திலேயே வானத்துக்கு பந்தை அடித்து ப்ரேஸ்வெல்லின் பந்தில் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 118 – 5 என திணறிக்கொண்டிருந்தது. ஷாண்டோவோடு சேர்ந்து ஜேக்கரும் கொஞ்சம் நின்று ரன்கள் சேர்க்க இந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், ஷாண்டோ சதமடிப்பார் என நினைக்கையில் ரூர்கியின் பந்தில் 77 ரன்களில் ப்ரேஸ்வெல்லிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜேக்கர் 45 ரன்களில் ரன் அவுட் ஆனார். வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்திருந்தது.

Rachin

நியூசிலாந்து அணிக்கு 237 ரன்கள் டார்கெட். ஆரம்பத்தில் சில நிமிடங்களுக்கு போட்டி வங்கதேசத்தின் கையில் இருப்பதாக தோன்றியது. ஏனெனில், டஸ்கின் அஹமது முதல் ஓவரையே விக்கெட் மெய்டனாக வீசி வில் யங்கை பெவியனுக்கு அனுப்பினார். நஹித் ராணா வில்லியம்சனை எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தார். நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இன்னும் 2 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தினால் வங்கதேசம் ஆட்டத்தில் நீடிக்கும் என தோன்றியது. ஆனால், கான்வேயும் ரச்சின் ரவீந்திராவும் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர். குறிப்பாக, ரச்சின் ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன் ஒரு போட்டியில் கேட்ச் பிடிக்க போய் பந்தை முகத்தில் வாங்கி இரத்தம் சொட்ட சிகிச்சைக்கு சென்றிருந்தார். அதன்பிறகு இந்தப் போட்டிக்குத்தான் வருகிறார். இங்கே ஆரம்பத்திலிருந்தே அத்தனை க்ளாஸாக ஆடி வந்தார். க்ரவுண்டடாகத்தான் நிறைய ஷாட்களை ஆடினார்.

ஆடிய ட்ரைவ்களும் ப்ளிக்குகளும் அத்தனை நேர்த்தியாக இருந்தது. ஒரு கட்டத்தில் கான்வே முஷ்டபிஜூரின் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டை பறிகொடுத்தார். இதன்பிறகு, டாம் லேத்தமுடன் ரவீந்திரா கூட்டணி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஏதுவான பந்துகளை அடித்து ஆடி 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரச்சின் சதத்தை கடந்தார். டாம் லேதம் அரைசதத்தை கடந்தார். சதத்தை கடந்த பிறகு போட்டியை வேகமாக முடிக்க எண்ணி பெரிய ஷாட்களை ஆட ரச்சின் முயன்றார். இதனால் 112 ரன்களில் ரிஷாத் ஹொசைனின் பந்தில் அவுட் ஆனார். லேதம் 55 ரன்களில் ரன் அவுட். ஆனாலும் நியூசிலாந்துக்கு சிரமம் ஏற்படவில்லை. எஞ்சிய சொற்ப ரன்களை க்ளென் பிளிப்ஸூம் ப்ரேஸ்வெல்லும் அடித்து வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினர்.

Rachin & Tom Latham

நியூசிலாந்து அணி ஏற்கெனவே பாகிஸ்தானை தோற்கடித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.