கடலூர்: முதல்வரிடம் செல்போன் இல்லை என்று தெரிவித்த கல்லூரி மாணவிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய செல்போன் வாங்கி தந்ததை அடுத்து அம்மாணவி நெகிழ்ச்சி அடைந்தார்.
கடலூர் மாவட்டத்துக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் களஆய்வுக்கு, கடந்த 21, 22 ஆகிய தேதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் முதல்வர் வரவேற்பு அளித்தனர். கடந்த 21-ம் தேதி இரவு நெய்வேலி தங்கிய முதல்வர். மறுநாள் 22ஆம் தேதி காலை புறப்பட்டு வேப்பூர் சென்றார். அப்பொழுது நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் பொதுமக்கள் பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில், பி எஸ் சி இயற்பியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ச.ஜனனி என்ற மாணவி முதல்வரை பற்றி தான் எழுதிய கவிதை அப்பா முத்துவேல் கருணாநிதி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை காண்பித்து ஆசிப்பெற்றார்.
அப்பொழுது முதல்வர் அந்த மாணவியிடம் இந்த கவிதையில் உனது செல்போன் நம்பரை எழுது என்று கூறியுள்ளார். அதற்கு மாணவி ஜனனி அவருடைய தந்தையார் செல்போன் என்னையும் அவருடைய அக்காவின் செல்போன் என்னையும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் முதல்வர் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள் நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுள்ளார் அதற்கு ஜனனி என்னிடம் செல்போன் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் முதல்வர் வேப்பூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி இரவு சுமார் 9:30 மணி அளவில் முதலமைச்சர் ஜனனியின் தந்தை சஞ்சீவ் காந்தியின் செல்போனுக்கு சென்று ஜனனியுடன் பேசினார். அந்த போன் சரியாக இல்லாததால் விட்டுவிட்டு பேசியதால், முதல்வர் போனை கட் செய்து விட்டு ஜனனி அக்காள் செல்போன் நம்பரில் இருந்து தொடர்புகொண்டு கல்லூரி மாணவி ஜனனியுடன் பேசி உள்ளார்.
அப்பொழுது அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு ஜனனி, கல்லூரி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும், நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எனது தந்தையார் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார் என்று கூறியுள்ளார். முதல்வர் அம்மாணவி கல்வி கற்று முடிப்பதற்கு தான் உதவுவதாகவும், கல்வி பயில ஏதுவாக கைப்பேசி அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தல்படி நேற்று (பிப்.24) மதியம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை அலுவலகத்தில் மாணவி ச.ஜனனி மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்து மாணவி ஜனனிக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து வாழ்த்தினார்.
கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கே.ப.ஆர்.பாலமுருகன், தலைமை என்.எல்.சி,தொ.மு.ச ,துணைத்தலைவர்,தொப்புளிக்குப்பம் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து இன்று (பிப்.25) காலை கல்லூரி வளாகத்தில் இருந்து கூறிய மாணவி ஜனனி, ”தமிழக முதல்வர் வாஞ்சையோடு செல்போனில் என்னிடம் பேசி, கல்வி உதவித் தொகை வழங்குவதாகவும் செல்போன் வாங்கித் தருவதாகவும் கூறி ஒரு தந்தை பேசுவதை போன்று பேசினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எனக்கு புதிய செல்போன் வாங்கித் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள் என்று உரிமையோடு கூறி அனுப்பி வைத்தார்.
எனது தந்தை விவசாயக் கூலி தொழிலாளர் ஆவார். ஒரு ஏழை குடும்ப பெண்ணுடன் முதல்வர் பேசியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனக்கு உதவிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வருடன் நேரடியாக பேசி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.” என்றார்.