இந்திரா காந்தி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் 3-வது நாளாக போராட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்றாவது நளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் கேள்வி நேரத்தின் போது சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசினார். அப்போது, ‘கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரையே அனைத்து திட்டங்களுக்கும் சூட்டினீர்கள்’ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைக்கு உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி கூறும்போது, “அவர்களது தலைவர் அவர்களுக்கு ஒரு தந்தை போன்றவர் என்று நாம் சொன்னால், அதில் தவறு காண முடியாது. ஆனால் அவர்களின் தலைவர் அவர்களின் தந்தை என்று சொன்னால், அது நன்றாக இருக்காது.

அமைச்சர் அவினாஷ் கெலாட்டின் பேச்சு இந்திரா காந்தியை கேலி செய்யும் விதத்தில் இருந்தது. சபை சுமுகமாக நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களால் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. அமைச்சர்களின் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ.க்களே கூறுகிறார்கள். இந்த மாநில அமைச்சரவை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்பதை அது விரும்பவில்லை.” என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து சட்டப்பேரவை திங்கள் கிழமை கூடியதும் இந்திரா காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெற வேண்டும், எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்றும்(திங்கள் கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவைக்கு வெளியேயும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்றும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடி கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், “கேள்வி நேரத்தின் போது, ​​ஒரு அமைச்சர் இந்திரா காந்தியை அவமதிக்க முயன்றார். அது துரதிர்ஷ்டவசமானது. அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். அவை குறிப்பில் இருந்து அது நீக்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதைத்தான் நாங்கள் விரும்பினோம். ஆனால், 6 எம்எல்ஏக்கள் அறிவிப்பு இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, எங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி, மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் பிற தலைவர்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அரசாங்கம் அந்த குறிப்பை நீக்கவில்லை, அமைச்சரும் மன்னிப்பு கேட்கவில்லை.” என குற்றம் சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.