மதுரை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (பிப்.25) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் க.சந்திரபோஸ், பா.பாண்டி, ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், ரா.தமிழ் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர்.
முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஓ.சுரேஷ் துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சீனிவாசன் நிறைவுரை ஆற்றினார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலகப் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.