ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்களை மிகவும் விரும்புகிறார் – மிட்செல் சாண்ட்னர்

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா சதம் (112 ரன்) அடித்து அசத்தினார். இந்நிலையில், ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி. தொடர்களை மிகவும் விரும்புவதாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டிக்கு பின்னர் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த சூழ்நிலையில் வங்காளதேசம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பிரேஸ்வெல் ஒரு தரமான பந்து வீச்சாளர். இப்போட்டியில் அவர் தனது வேகத்தை மாற்றி சிறப்பாக பந்துவீசி எதிரணியை அழுத்தத்தில் தள்ளினார்.

மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்பது எப்போதும் அவசியமான ஒன்று. விக்கெட் நான் நினைத்ததை விட இரண்டு வேகத்தில் இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது பனியின் தாக்கம் கொஞ்சம் இருந்தது. ஆனால், நான் நினைத்த அளவுக்கு இல்லை. ரச்சின் ரவீந்திரா ஐசிசி தொடர்களை மிகவும் விரும்புகிறார்.

அவர் ஒருபோதும் ஆட்டத்தை விட்டு வெளியேறவில்லை. மேலும், அவர் டாம் லாதமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களுக்கு பெரிய அளவில் உதவியது. ஆனால், அடுத்த போட்டியில் வேறு விக்கெட்டில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.