குவஹாத்தி: “மின்னணு புரட்சி, புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்தே சர்வதேச முன்னேற்றம் உள்ளது” என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டை (Advantage Assam 2.0) பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 25) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கிழக்கு இந்தியாவும், வடகிழக்கு இந்தியாவும் இன்று எதிர்காலத்திற்கான ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றன. அசாமின் சிறப்பான திறன் மற்றும் முன்னேற்றத்தை உலக நாடுகளுடன் இணைக்கும் மாபெரும் முன்முயற்சியாக இந்நிகழ்ச்சி உள்ளது.
இந்தியாவின் வளத்தில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. தற்போது நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்லும் போது, கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தங்களது உண்மையான திறனை வெளிப்படுத்தும். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுக்கள். அகரவரிசையில் அ என்றால் அசாம் என்று சொல்லிக்கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நான் 2013-ம் ஆண்டு கூறியிருந்தேன்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், நிபுணர்கள் ஒருமனதாக ஒரு உறுதியை ஒப்புக்கொள்கிறார்கள். அதுதான் இந்தியாவின் விரைவான வளர்ச்சி. இந்த நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இன்றைய இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் இளைஞர்கள்மீது உலக நாடுகள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளன. அவர்கள் வேகமாக திறன் மிக்கவர்களாகவும், புதுமையானவர்களாகவும் மாறி வருகிறார்கள். இந்தியாவின் புதிய நடுத்தர வகுப்பினர் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. புதிய விருப்பங்களுடன் அவர்கள் வறுமையிலிருந்து மீண்டு வருகிறார்கள்.
அரசியல் நிலைத்தன்மையையும், கொள்கைத் தொடர்ச்சியையும் இந்தியாவின் 140 கோடி மக்களும் ஆதரிக்கிறார்கள். இவ்விஷயத்தில் இந்திய மக்கள் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருக்கின்றன. சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா தனது உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, பல்வேறு உலகளாவிய பிராந்தியங்களுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இணைகிறது. கிழக்கு ஆசியாவுடனான வலுவான இணைப்பு மற்றும் புதிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழித்தடம் ஆகியவை புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்திருக்கின்றன.
Advantage Assam முதலாவது உச்சிமாநாடு 2018-ல் நடைபெற்றது. அந்த நேரத்தில் அசாமின் பொருளாதாரம் ரூ. 2.75 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. தற்போது, அசாம் சுமார் ரூ.6 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. பாஜக அரசின் கீழ், அசாமின் பொருளாதாரம் வெறும் ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இது மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை இன்ஜின் அரசுகள் இருப்பதால் கிடைத்த பலன். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய 70 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது மூன்று பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2009 மற்றும் 2014 க்கு இடையில், அசாமின் சராசரி ரயில்வே பட்ஜெட் ரூ. 2,100 கோடியாக இருந்தது. ஆனால் பாஜக தலைமையிலான அரசு அசாமின் ரயில்வே பட்ஜெட்டை நான்கு மடங்கு அதிகரித்து ரூ.10,000 கோடியாக உயர்த்தியுள்ளது. அசாமில் 60-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கில் முதலாவது பகுதி அளவிலான அதிவேக ரயில் தற்போது குவஹாத்தி மற்றும் புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்டு வருகின்றன.
அசாமில் விமான போக்குவரத்து விரைவாக விரிவடைந்து வருகிறது. 2014-ம் ஆண்டு வரை 7 வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 30 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விரிவாக்கம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த மாற்றங்கள் உள்கட்டமைப்புடன் மட்டும் செயல்படுத்தப்படாமல், சட்டம் ஒழுங்கில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஏராளமான அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு இளைஞரும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அசாம் ஆளுநர் லக்ஷமன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர், சர்பானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advantage Assam 2.O முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025, குவஹாத்தியில் பிப்ரவரி 25 முதல் 26 வரை நடைபெறுகிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகள், உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.