மதுரை: மகா சிவராத்திரியை ஒட்டி நாளை (பிப்.26) நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மதுரை அமர்வு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி சார்பில் இன்று (பிப்.25)அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நாளை (பிப்.26) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு நாளை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி வழிபாட்டை இந்துக்களின் புனிதமாக கருதி மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா,டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகான்ட், மேற்கு வங்களாம் போன்ற மாநிலங்களில் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மகா சிவராத்திரி கொண்டாடும் நாளை நீதிமன்றங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.