இஸ்லமபாத்,
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.நான் நவாஸ் ஷெரீபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன்.
அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடி, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை மகத்துவமான நாடாக உயர்த்துவேன்.பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடனை நம்பி இருப்பதைவிட, தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்” என்றார்.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ள பாகிஸ்தான், மேற்கொண்டும் கடனுதவியை நாடி வருகிறது. இத்தகைய சூழலில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவை தேற்கடிப்பேன் எனப் பேசியிருப்பதை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.