சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணியும் 2 வெற்றிகளுடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் குரூப் Bல் எந்த அணியும் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை.
பாட் கம்மின்ஸ் குற்றசாட்டு
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானில் விளையாடும் போது, இந்தியா மட்டும் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது. இது அவர்களுக்கு சாதகமாகவும், மற்ற அணிகளுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். “இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்து விஷயங்களும் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. இந்தியா அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுகின்றனர். இது அவர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கிறது. இந்திய அணி ஏற்கனவே மிகவும் வலுவாக உள்ளது. இந்நிலையில் அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெறுவதன் மூலம் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர்,” என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மட்டும் ஏன் துபாயில் விளையாடுகிறது?
இந்திய வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகத்திடம் பேசி, ஐசிசி இறுதியில் ஹைபிரிட் மாடலை கொண்டு வந்தது. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்களில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வேறு இடத்தில் மாற்றப்படவில்லை என்றால் இந்த தொடரில் இருந்து விலகவும் இந்தியா தயாராக இருந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாங்களும் இந்த நிகழ்வை முழுவதுமாக புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஹைபிரிட் மாடலுக்கு ஓகே சொன்ன பாகிஸ்தான்
முடிந்தவரை போராடி பார்த்த பாகிஸ்தான் நிர்வாகம் இறுதியில் ஹைபிரிட் மாடலுக்கு செவிசாய்த்தது. ஆனால் கூடவே சில கண்டிஷன்களையும் போட்டனர். 2031 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு ஐசிசி தொடருக்கும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என்று பாகிஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று PCB கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி தொடரை பாகிஸ்தானில் நடத்தி வருகிறது.