97-வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. விருதுக்காக நெகிழ்ந்து, விருதுக்கு முரண்பட்டு, மேடையில் தன் தரப்பு அரசியலை முன்வைத்து எனப் பல அதிரடியான நிகழ்வுகளை ஆஸ்கர் மேடை கண்டிருக்கிறது. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்து தொடர்ந்து நம் கட்டுரைகளாக நம் விகடன் தளத்தில் பார்க்கலாம்.
1973, மார்ச் 31-ம் தேதி, 45-வது ஆஸ்கர் விருதுகள்
இன்று வரை பல கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் `தி காட்ஃபாதர்’ திரைப்படம் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்த `தி காட்பாதர்’ திரைப்படம் விருதுகளை அள்ளப்போகிறதென பலரின் நம்பிக்கைக் கண்களும் அத்திரைப்படத்தின் மீதுதான் இருந்தன. பலரும் கணித்தைப் போலவே மூன்று ஆஸ்கர் விருதுகள் அத்திரைப்படத்திற்குக் கிடைத்தது. அதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நடிகர் மார்லன் ப்ரான்டோவுக்கு அறிவித்தனர்.

உலகத்தின் அத்தனை நடிகர்களும் ஆஸ்கர் விருது நம் கைகளுக்கு கிடைக்க வேண்டும் என சிரத்தைக் கொடுத்து உழைப்பார்கள். ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை ஏதாவதொரு நடிகர் நிராகத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மையாகவே ஒரு நடிகர் தனக்கு அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை நிராகரித்தார். அந்த நடிகர்தான் மார்லென் ப்ராண்டோ. இது அவர் வென்ற இரண்டாவது ஆஸ்கர் விருது.
அந்த உயரிய விருதை அவர் நிராகரித்ததற்கு பின்னால் வரவேற்கத்தக்க காரணமொன்றும் இருக்கிறது. ஆம், அப்போதிலிருந்து ஹாலிவுட் ஆக்கிரமிப்பு அமெரிக்கர்களின் (White Americans) கைகளில்தான் இருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, விருதுகளில் முன்னிலை வகிப்பது என அனைத்திலும் ஆக்கிரமிப்பு அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்தியது பற்றிய கதைகள் பல இருக்கின்றன. தொடர்ந்து ஹாலிவுட்டில் பூர்வகுடி அமெரிக்கர்களை (Native Americans) வில்லன்களாகச் சித்தரித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

இந்த ஸ்டிரியோடைப்பை உடைக்க வேண்டும் எனப் போராடிய பூர்வகுடி அமெரிக்கர்களின் வலி மிகுந்த வரலாறுகளும் உண்டு. ஒரு கட்டத்திற்குப் பிறகு பூர்வகுடி அமெரிக்கர்களின் சித்தரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சில நடவடிக்கைகளை சில இயக்குநர்கள் கையில் எடுத்தனர். ஆனால், அதற்கு ஹாலிவுட்டின் ஆதிக்கம் வழி கொடுக்கவில்லை. சொல்லப்போனால், பூர்வகுடி அமெரிக்கர்களை காட்சிப்படுத்திய கதைகளில் அவர்களைப் போலவே ஆக்கிரமிப்பு அமெரிக்கர்கள் ஒப்பனை செய்துக் கொண்டு நடித்திருந்தனர்.
இப்படியான விஷயங்கள் மார்லென் ப்ராண்டோவை சினம் கொள்ள வைத்தது. 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற இதே ஆண்டின் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி `அமெரிக்க இந்தியன் இயக்கம் (AIM)’ தலைமையில் பூர்வகுடி அமெரிக்கர்கள் தென் டகோட்டா பகுதியிலுள்ள வுண்டட் நீ பகுதியில் ( Wounded Knee) தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக அமெரிக்க அரசை எதிர்த்து 71 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். `ஹாலிவுட் ஆக்கிரமிப்பு அமெரிக்கர்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கிறது. தொடர்ந்து ஹாலிவுட், பூர்வகுடி அமெரிக்கர்களை தவறாக சித்தரித்து தவறான இமேஜ்ஜையும் கட்டமைத்து வருகிறது. ஹாலிவுட் தனது இந்த இனவாத செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற நிலைப்பாட்டைக் கொண்ட மார்லன் ப்ராண்டோ இந்தப் போராட்டத்திற்கு கவனத்தை ஈரக்க விரும்பினார். ஆதலால் ஆஸ்கர் விருதை நிராகரிக்கவும் முடிவு செய்தார்.

திட்டமிட்ட அச்சம்பவம் ஹாலிவுட்டில் ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக பூர்வகுடி அமெரிக்க செயற்பாட்டாளர் மற்றும் நடிகை சச்சீன் லிட்டில்ஃபெதரை அந்த ஆஸ்கர் விருதை நிராகரிப்பதற்கு அனுப்பினார் மார்லென் ப்ராண்டோ. மார்லன் ப்ராண்டோவுக்கு விருது அறிவிக்கப்பட்ட பிறகு மேடைக்குச் சென்ற சச்சீன் லிட்டில்ஃபெதரை முதலில் விருதை நிராகரிக்கும் செய்கையை செய்தார்.
அதன் பிறகு அந்த மேடையில் பேசிய அவர், “ நான் மார்லன் ப்ராண்டோவை முன்னிலைப்படுத்தி இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். அவர் உங்களிடம் ஒரு நீண்ட உரையை ஆற்றச் சொல்லி என்னை அனுப்பினார். ஆனால், நேரம் காரணமாக இதை பத்திரிகைகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன். சினிமாதுறை பூர்வகுடி அமெரிக்கர்களை நடத்தும் விதம்தான் மார்லன் ப்ராண்டோ இந்த விருதை நிராகரிப்பதற்குக் காரணம். எதிர்காலத்தில், நம் இதயங்களும் புரிதல்களும் அன்போடும் பெருந்தன்மையோடும் சந்திக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இவர் இந்த உரையை முடிப்பதற்குள்ளாகவே அரங்கிலிருந்த பலரும் சச்சீனை நோக்கி எதிர்ப்புக் கூச்சலிட்டிருக்கிறார்கள். மார்லன் ப்ராண்டோ நினைத்து போலவே இச்சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது ஹாலிவுட்டில் இச்சம்பவம் பரபரப்பையும் கிளப்பியது. ஆனால், சச்சீனுக்கு இந்த சம்பவம்தான் அவரின் கரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு அவரை ஹாலிவுட் ஓரங்கட்டி ப்ளாக்லிஸ்ட் செய்தது.
மார்லன் ப்ராண்டோவின் இந்த செயலுக்கு ஹாலிவுட் அவரை தூற்றவும் செய்தது, போற்றவும் செய்தது! ஆனால், கடைசி வரை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்ததை எண்ணி மார்லன் ப்ராண்டோ பெருமையாக உணர்ந்திருக்கிறார்!
– கதைகள் தொடரும்