வாரணாசியில் நாகா துறவிகளின் பிரம்மாண்ட ஊர்வலம் – காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாகா துறவிகள் ஊர்வலம் நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா இங்குள்ள திரிவேணி சங்கமத்தின் கரைகளில் ஜனவரி 13ம் தேதி முதல் துவங்கியது. இதில் பவுசு பூர்ணிமா, மகர சங்கராந்தி, மவுனி அமாவசை, வசந்த் பஞ்சமி, மக் பூர்ணிமா, மகாசிவராத்திரி என மொத்தம் ஆறு வகையான ராஜகுளியல் நிகழ்ச்சி இடம்பெற்றது. இவற்றில் ஐந்தாவது புனிதக்குளியலான வசந்த் பஞ்சமி பிப்ரவரி 3 -ல் முடிந்தது. இதையடுத்து மகாகும்பமேளாவில் முகாமிட்டிருந்த 13 அகாடாக்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வராணாசிக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்த இடப்பெயர்வு, மகா கும்பமேளாவில் மட்டுமே நடைபெறும். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மகா கும்பமேளாவில் நடத்தியது போல், புதன்கிழமை காலை வாராணாசியில் மாபெரும் ஊர்வலம் நடத்தினர். ஜுனா அகாடா தலைமையில் மகா சிவராத்திரிக்காக, நாகா சாதுவினர் நடத்திய இந்த ஊர்வலம் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. அதிகாலை 4 மணிக்கு அனைவரும் கங்கையில் புனிதக் குளியல் நடத்தினர். அதன்பிறகு துவங்கிய ஊர்வலத்தில், உடல் முழுவதிலும் சாம்பலைப் பூசி, நாகா சாதுக்கள் நிர்வாணமாக, தம் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கழுத்தில் சாமந்திபூ மற்றும் ரோஜா பூ மாலைகளுடன் அப்பகுதி முழுவதிலும் விபூதிகள் சூழ்ந்து பறந்தன. அவர்களது கைகளில் வாள், வேல், அம்பு, சூலாயுதம் மற்றும் குத்துவாள் என பலவகையான ஆயுதங்கள் இருந்தன. அவற்றை சுழற்றி வித்தைகளை செய்தபடி சென்ற நாகா சாதுக்களின் ஊர்வலம் பொதுமக்களை கவர்ந்தது. ஊர்வலத்தில், மேளங்களும், உறுமிகளும் விண்ணைப் பிளக்கும் ஓசையை கிளப்பின. ‘ஹர ஹர மஹாதேவ்’ என்று ஊர்வலத்தில் கலந்துகொண்ட துறவிகள் கோஷமிட்டனர்.

வாராணாசியின் ஹனுமர் காட்டில் துவங்கிய இந்த ஊர்வலம் கதவுலியா வழியாக, காசி விஸ்வநாதர் கோயிலில் நுழைந்தது. ஊர்வலத்தில் சில நாகா துறவிகள், ரதம் போல் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் வந்திருந்தனர். சிலர் வீரர்களைப் போல் குதிரைகளிலும் வாள்களை ஏந்தி வலம் வந்தனர். இந்த ஊர்வலத்துக்கு ஜுனா அகாடாவின் தலைவரான மகா மண்டலேஷ்வர் சுவாமி அவ்தேஷாணந்த் கிரி தலைமை தாங்கினார். வழக்கமாக இக்கோயிலின் முக்கிய வாயில் வழியாக துறவிகள் நுழைவது வழக்கம். இன்று அவர்கள் முக்கிய பிரமுரமுகர்கள் செல்லும் வாயில் எண் 4-ல் வழியே நுழைந்தனர். இந்த வாயிலை ஒட்டியே கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது.

இதனால், எந்த பதற்ற நிலையும் உருவாகாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு வாராணாசி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்பகுதியில் இருந்தனர். இந்த ஊர்வலம் தொடர்பாக அகாடாவினருடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அதன்படி இன்றைய ஊர்வலம் பிரச்சினைகள் எதுவும் இன்றி அமைதியாக முடிந்தது. சரியாக காலை ஏழு மணிக்கு அகாடா துறவிகள் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக நிர்வாணி அகாடாவின் தலைவரான மகா மண்டலேஷ்வர் கைலாசாணந்த் கிரியும் வாராணாசி வந்திருந்தார்.

இவரை, அகில இந்திய அகாடாக்கள் சபையின் தலைவரான மகா மண்டலேஷ்வர் ரவீந்திரா புரி முன்னின்று வரவேற்றார். அகாடா துறவிகளின் இந்த சடங்குகள் நாளை காலை 11 மணி வரை தொடர உள்ளது. இந்த சடங்குக்காக ஜுனா அகாடாவினர், காசி விஸ்வநாதர் கோயில் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளனர். அக்கோயிலின் பண்டிதர்கள் ஜுனா அகாடாவினரிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர், அவர்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.