கோவை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று கோவையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் நிதிப் பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார்.
கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைக்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 3 மாவட்ட அலுவலகங்களையும் திறந்துவைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா, “ஊழல் வழக்குகளில், திமுகவின் அனைத்துத் தலைவர்களும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களின் தலைவர்களில் ஒருவர் வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளார். மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மூன்றில் ஒரு பகுதியினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். சமூகத்தில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளும் திமுகவில் சேர கட்சி அனுமதித்தது போல் தெரிகிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மறுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி வழங்கியுள்ளது. மத்திய அரசால் மாநிலம் அநீதியை சந்தித்ததாக முதல்வர் அடிக்கடி கூறுகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உண்மையான அநீதி நடந்தது தெளிவாகிறது.
மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்வதற்காக இல்லாத பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகும், தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் இடங்கள் குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக நிறுவும். இதன்மூலம், வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் துடைத்தெறியப்படுவார்கள். அந்த புதிய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்” என்று அமித் ஷா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.