சேலம்: “தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த திருமண விழாவின்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “கல்வி என்பது மாநில அரசின் உரிமை. 45 ஆண்டுகளுக்கு முன்னர், மாநிலங்களின் பட்டியலில் கல்வி இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. நம்முடைய தாய்மொழி தமிழ். மிகப் பழமையான தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும். கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசு கடமை. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி என்றால் தமிழுக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?.
மும்மொழிக் கொள்கை மத்திய அரசினுடையது. தமிழக அரசின் கொள்கை இருமொழிக் கொள்கை. பாமகவின் கொள்கை ஒரு மொழி கொள்கைதான். உலகம் முழுவதும், மக்கள் அவரவர் தாய் மொழியில் படித்து தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் தாய் மொழியில் படித்தவர்கள் தான். உலகின் பழமையான மொழி, நம் தமிழ் மொழி. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டும். நம்முடைய தாய்மொழி அழிந்து வருகிறது. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது தவறில்லை, ஆனால் திணிக்கக் கூடாது.
அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றால் நிதி தரமாட்டோம் எனக் கூறுவது தவறு. இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இங்கு கல்வி வியாபாரமாக உள்ளது. சோவியத் யூனியன் ஒரே நாடாக இருந்தது .பின்னர் மொழி பிரச்சினையால் 15 நாடாக மாறிவிட்டது. ஆனால், அதுபோன்று இந்தியாவில் நடக்காது. மொழியை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் நடவடிக்கை. நான் கூட்டணிக்காக பேசவில்லை. மனதில் பட்டதைக் கூறுகிறேன்,” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் கூறியது: “தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என ஓர் அச்சம் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்கிட, மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். எந்த மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதோ அங்கு கூடுதலாக மக்களவைத் தொகுதிகளும், மக்கள் தொகை குறைந்து இருந்தால் மறுசீரமைப்பில் குறைக்கப்படுவதாகவும் தெரிகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. எனினும், இது தவறான போக்கு. தமிழகத்தின் உரிமைகளை நாம் என்றும் இழந்து விடக்கூடாது. அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்.
இப்போது மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. எந்த மாநிலத்துக்கும் மத்திய கொள்கைகளை திணிக்கக் கூடாது, குறிப்பாக கல்வியில் திணிக்கக் கூடாது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால், அதை ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசின் விருப்பம். அதே வேளையில், இந்தி வேண்டாம் என்று திமுக கூறுகிறது. தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து தான் ஆட்சிக்கு வந்தீர்கள். தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழை பயிற்று மொழி ஆக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கு என்ன செய்தீர்கள்? நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றீர்களா?
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், மத்திய அரசு தரும் ரூ.2,500 கோடியை வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே. தமிழை ஒரு பாடமாக கொண்டு வரவாவது முயற்சி செய்தார்களா? தேர்தலுக்காக, அரசியலுக்காக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.