சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கெய்ரோ,

சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகில் உள்ள நகரமான ஓம்டுர்மனுக்கு வடக்கே வாடி சயீத்னா விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது அன்டோனோவ் விமானம் விபத்துக்குள்ளானது என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஆயுதப்படை வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.

இந்நிலையில் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஓம்டுர்மனில் உள்ள கர்ராரி மாவட்டத்தில் உள்ள ஒரு பொதுமக்கள் வீட்டின் மீது விமானம் மோதியதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளதால், மக்கள் பலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2023 முதல் சூடானில் உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதன்படி அங்கு ராணுவத்திற்கும், துணை ராணுவக் குழுவினருக்கும் இடையிலான பதட்டங்கள் வெளிப்படையான போராக வெடித்தன. இந்த சண்டை நகர்ப்புறங்களை நாசமாக்கி உள்ளது. கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற இடங்களில் துணை ராணுவ குழுக்களுக்கு எதிராக ராணுவம் நிலையான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதால், சமீபத்திய மாதங்களில் போர் தீவிரமடைந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.