புனே: மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பேருந்தை அடித்து நொறுக்கிய சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியினர், மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் புனே நகரின் பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தின் நடுவில், நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் 26 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவல்: இந்தக் குற்றம் செவ்வாய்கிழமை அதிகாலை 5.45 மணி அளவில் நடந்துள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குச் செல்வதற்காக அந்த இளம்பெண் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் அவர் விசாரித்துள்ளார். அப்போது அந்த நபர், விளக்குகள் எரியாமல் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து அந்த குறிப்பிட்ட கிராமத்துக்குச் செல்லும் என கூறி இருக்கிறார்.
இதை நம்பி அந்த பேருந்தில் அந்த இளம்பெண் ஏறியபோது, உடன் வந்த அந்த நபர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பேருந்து வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் என்பதும், 36 வயதாகும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கண்டுபிடிக்க போலீசார், எட்டு சிறப்பு குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பேருந்து நிலையம், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப் பெரிய பேருந்து நிலையமாகும்.
துணை முதல்வர் கண்டனம்: இந்தச் சம்பவத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புனே நகரில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, கோபத்தை ஏற்படுத்துகிறது. அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இதற்கு ஏற்புடையதாக இருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையருக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன்.
முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இந்தக் குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு காவல் துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவர், “குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார். சட்டப்படி அவருக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இந்த உறுதிமொழியை மகாராஷ்டிராவின் எனது அனைத்து சகோதர சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கும் நான் அளிக்கிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், “டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தபோது மக்கள் ஆட்சியை மாற்றினர் (காங்கிரஸை வெளியேற்றி, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகாரம் அளித்தனர்). நீங்கள் (பாஜக) பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களை ஊக்குவிக்கிறீர்கள். ஆனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புறக்கணிக்கிறீர்கள். புனே பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக உள்துறைத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, “சமூக விரோத சக்திகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. புனேவில் குற்றங்களைத் தடுக்க உள்துறை துறை தவறிவிட்டது.” என குற்றம் சாட்டினார்.
சேதத்தை ஏற்படுத்திய சிவ சேனா (யுபிடி): பேருந்து நிலையத்தில் பேருந்தினுள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சிவ சேனா(யுபிடி) சார்பில் பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போது, சிவசேனா தலைவர்கள் சிலர் அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தனர். அலுவலக பொருட்களையும் சேதப்படுத்தினர்.