சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் மோதின. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அபாரமாக ஆடிய இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் குவித்து, சாம்பியன்ஸ் டிராபியில் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு பேசிய இப்ராஹிம் சத்ரான், “7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ளேன். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவது என்பது எளிதானதல்ல. கடந்த ஒரு வருடமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விலையிடவேயில்லை. என் மீது நிறைய எதிரிபார்ப்புகள், நான் நன்றாக விளையாடினேன். என்னை நானே அழுத்தத்துக்குள்ளாக்கி இந்த இன்னிங்ஸை ரசித்து விளையாடினேன். எனக்கான நேரத்தை எடுத்து, கூடுதலாக எதையும் சிந்திக்காமல் சரியாக ஆடினேன்.

யூனிஸ் கான் தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் பாகிஸ்தானில் நிறைய விளையாடியிருக்கிறார். அவர் கடந்த சில வருடங்களாக ஜொனாதன் ட்ராட்டுடன் இங்கிருக்கிறார். நீங்கள் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். போட்டிக்கு முன்பாக நான் ரஷீத் கானிடம் பேசினேன். எப்போதெல்லாம் அவருடன் பேசுகிறேனோ, அப்போதெல்லாம் நான் ரன்களை அடித்தேன். இன்று சதம், அதற்கு ரஷீத் கானுக்கு நன்றி” என்று கூறினார்.