அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்.. உக்ரைன் அரசு ஒப்புதல்

வாஷிங்டன்,

உக்ரைன் – ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளை மறுநாள் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷியாவுடனான போரின்போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை தங்களுக்கு கால வரையில்லாமல் அளிக்கப்படவேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும், ரஷியாவுடனான போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிமவள ஒப்பந்தத்தில் டிரம்பும் ஜெலன்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்த விதிமுறைகளை உக்ரைன் அரசு ஏற்றுக்கொண்டதாகவும், உக்ரைன் தனது கனிம வளங்களை கூட்டாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவுடனான போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை பெறுவதற்கும், டிரம்ப் நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நீண்ட கால அமெரிக்க பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.

உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற தாதுக்கள் நிலத்தடியில் ஏராளமாக உள்ளன. ஸ்கேண்டியம் போன்ற அரிய வகை தாதுக்களும் உள்ளன. அவை ராணுவ தளவாடங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை பல தொழில்களுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.