மாநிலங்களவை தேர்தலில் கேஜ்ரிவால் போட்டி?

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி கண்டது. அந்த கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 48 இடங்களில் வெற்றி கண்ட பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி கண்டனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் இடைத்தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் தனது குரலை ஒலிக்கச் செய்ய கேஜ்ரிவால் முடிவு செய்துள்ள அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி இதை மறுத்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியதாவது: இதுதொடர்பாக கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. விரைவில் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும். மாநிலங்களவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவார் என்று வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை.

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில்தான் வருகின்றன. முன்பு கூட அவர் பஞ்சாப் முதல்வர் பதவியில் அமர்வார் என்றும் பத்திரிகைகள் எழுதின. இந்த செய்திகள் அனைத்தும் தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.