புதுடெல்லி: தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிப்பதே போதுமானது என்றும் வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இப்போது உள்ள சட்டத்தின்படி குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், தண்டனை காலம் முடிந்த பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவதைத் தடுக்க இதுவே போதுமானது ஆகும்.
நியாயமான கொள்கைகளை கருத்தில் கொண்டுதான் தகுதிநீக்க காலம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற காரணத்தால் அது தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான தற்போதைய சட்ட விதிகள் அரசியலமைப்பு ரீதியாக வலுவாக உள்ளன.
மேலும் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது பொருத்தமானதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யவது நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவர். மேலும் அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.