பெங்களூரு: தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித் ஷா அளித்துள்ள வாக்குறுதி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் தவறான தகவல்களை தெரிவித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் இந்தக் கருத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அல்லது கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம்.
பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு எல்லை நிர்ணயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறது. முந்தைய எல்லை நிர்ணயப் பணிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங்களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கர்நாடக முதல்வர் அலுவலகம் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 அல்லது 2031-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படுமானால், கர்நாடகாவுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 28 முதல் 26 வரை இருக்கும். ஆந்திரா 42 முதல் 34 வரையும், கேரளா 20 முதல் 12 வரையும், தமிழ்நாடு 39 முதல் 31 வரையும் நாடாளுமன்றத் தொகுதிகளை பெறும். அதேநேரத்தில், வட மாநிலங்களுக்கான மக்களவை இடங்கள் அதிகரிக்கும். உத்தரப் பிரதேசம் 80 முதல் 91 வரையும், பிஹார் 40 முதல் 50 வரையும், மத்தியப் பிரதேசம் 29 முதல் 33 வரையும் தொகுதிகளைப் பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.