புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா வருகை தருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை வராத அவர்களை துறவிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்றுடன் முடிந்தது. 45 நாட்கள் நடைபெற்ற கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு புனித குளியலை முடித்தனர். மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியானது. சிறப்பு நாட்களில் அதிகமான கூட்டம் இருப்பதால், சாதாரண நாட்களில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசிவரை ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவுக்கு வரவே இல்லை. இதை கும்பமேளாவுக்கு வந்திருந்த துறவிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ராகுல், பிரியங்காவைக் குறிப்பிட்டு உ.பி. அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் தலைவரான துறவி பீடாதிஷ்வர் சிவயோகி மவுனி கூறும்போது, “கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்து விடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை.
தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவில்லை. இந்த பிரயாக்ராஜ் அவர்களது சொந்த குடும்ப பூமியாக இருந்தும் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். அவர்களது முன்னோர்கள் கும்பமேளாக்களுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களது விசுவாசத்தை மெல்ல இழந்துவரும் இந்த தலைவர்கள் சனாதனத்துக்கு எதிரானவர்கள். சர்வதேசங்களிலிருந்து பலரும் வந்த மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸார் வராதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியும் காங்கிரஸின் தோழமைக் கட்சியுமான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மகா கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இருப்பினும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனா யுபிடி பிரிவின் தலைவருமான உத்தவ் தாக்கரே-வும் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.