கொல்கத்தா: மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு என்பதை மறுத்துள்ள அக்கட்சிப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “எனது தலைவர் மம்தா பானர்ஜி தான்” என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் பேசிய திரிணமூல் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி, “நான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன். மம்தா பானர்ஜிதான் என்னுடைய தலைவர். நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர போகிறேன் என்று கூறுபவர்கள் வதந்தியை பரப்புகிறார்கள். யார் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தங்களின் சொந்த நலனுக்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள்.
கடந்த பேரவைத் தேர்தலில் செய்தது போலவே கட்சிக்குள் இருந்த துரோகிகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். நீங்கள் அனைவரும் எங்களுடன் இருக்கும் வரை, பாஜகவின் சக்கரவியூகத்தை நாங்கள் தொடர்ந்து தகர்ப்போம்.
கட்சிக்கு எதிராக பேசியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராக சென்ற முகுல் ராய் மற்றும் சுவேந்து அதிகாரி போன்றவர்களை அடையாளம் கண்டது நான்தான்.” என்றார்.