போபால் விஷ வாயு விபத்து நடந்த இடத்திலிருந்து நச்சுக்கழிவுகளை அழிப்பது தொடர்பான மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை பேரிடராக கருதப்படுகிறது.
இந்நிலையில், யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கழிவுகள் அகற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், உடனடியாக கழிவுகளை அகற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 3-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் இந்தக் கழிவுகளை பிதாம்பூரில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் பிப்ரவரி 27-ம் தேதி அழிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, 377 டன் நச்சுக்கழிவுகள் பிதாம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே, பிதாம்பூரில் கழிவுகளை அழிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.