புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவில், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் உள்ள முஸ்லிம் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில வக்பு வாரியங்கள் முடிவெடுக்கின்றன. இதில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரவும், வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தவும், துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்களை கொண்டு வந்து மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு கடந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அனுப்பப்பட்டது. இதை ஆய்வு செய்யும் கூட்டுக் குழுவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்.பி.க்களும் இடம் பெற்றிருந்தனர். இதன் தலைவராக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் இருந்தார். இந்த குழு கடந்த 6 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. இதில் 66 மாற்றங்கள் முன்மொழியப்பட்டன. எதிர்க்கட்சிகள் கூறிய 44 மாற்றங்கள் நிராகரிக்கப்பட்டன. ஓட்டெடுப்புக்கு பிறகு, 15-11 என்ற பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.
கூட்டுக் குழுவின் 655 பக்க அறிக்கை மக்களவை தலைவரிடம் கடந்த ஜனவரி 30-ம் தேதி வழங்கப்பட்டது. அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆகியோருடன் மக்களவை தலைவர் ஆலோசனை நடத்தினார். இதில், அதிருப்தி கருத்துகளையும் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள், 2 முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் ஓபிசி பிரிவை சேர்ந்த ஒரு உறுப்பினரை வக்பு கவுன்சிலில் இடம்பெற செய்வது, வக்பு தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்டங்களை நன்கு அறிந்த உறுப்பினர் இடம்பெறுவது போன்ற மாற்றமும் இதில் அடங்கும்.
ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை, மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக மாநிலங்களால் நியமிக்கப்படும் அதிகாரி தீர்மானிப்பார் என்ற முக்கிய மாற்றமும் இதில் இடம்பெற்றுள்ளது. வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து இணையதளத்தில் தெரிவிக்க 6 மாத அவகாசம் அளிக்கும் மாற்றத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் 2-வது கட்ட கூட்டத் தொடர் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.