மின் வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணிச்சுமை அதிகரிப்பு: குறிப்பாக, 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு, அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், 30 ஆயிரம் கேங்மேன் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய இடத்தில், வெறும் 5 ஆயிரம் கேங்மேன்களை நிரப்ப மின் வாரியம் தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அந்த அனுமதியைக்கூட தர அரசு தயக்கம் காட்டுகிறது.
அனுமதிக்கப்பட்ட காலி பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது கண்டனத்துக்குரியது. மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திவிட்டு, உரிய சேவையை செய்யாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்நிலை நீடித்தால் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும்.
நிர்வாகம் சீர்கெடும் சூழல்: மின் தேவைக்கும், மின் விநியோகத்துக்கும் இடைவெளி என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், செலவை மிச்சப்படுத்துவதற்காக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கனம் காட்டுவது நிர்வாகச் சீரழிவுக்கு வழிவகுக்கும்.
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, மின் வாரியத்தில் உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களையும், இதர பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.