பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதிய உணவுக்கு பிறகு எம்எல்ஏக்கள் தூங்குவதற்கு சென்று விடுகின்றனர். இதனை தடுக்க பேரவை வளாகத்திலேயே குட்டி தூக்கம் போடுவதற்கு ஏதுவாக ரிக்லைனர்களை ஏற்பாடு செய்யுமாறு பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டும் என பேரவைத் தலைவர் யூ.டி.காதர் வலியுறுத்தி உள்ளார்.
அதேவேளையில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவைக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். அப்போது உறுப்பினர்கள் சிலர், ‘மதிய உணவுக்கு பின்னர் பலரும் தூங்க விரும்புவதால் அறைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் பிற்பகல் அமர்வில் தங்களால் பங்கெடுக்க இயலவில்லை’ என கூறியுள்ளனர்.
இதையடுத்து பேரவைத் தலைவர் யூ.டி.காதர், பிற்பகல் அமர்வில் உறுப்பினர்கள் அதிகளவில் பங்கேற்க வசதியாக சட்டப்பேரவையிலேயே ரிக்லைனர் எனப்படும் சாய்வு சோபாக்களை ஏற்பாடு செய்யுமாறு பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து 30 ரிக்லைனர்களை வாடகைக்கு எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிக்லைனர்கள் போடப்படுவதால், கர்நாடக எம்எல்ஏக்கள் இனி சட்டப்பேரவையிலேயே மதிய உணவுக்கு பின்னர் குட்டி தூக்கம் போடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக பேரவைத் தலைவர் யூ.டி.காதரின் இந்த நடவடிக்கைக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.