அறிவியல் வழிமுறை என்றால் என்ன? | தேசிய அறிவியல் நாள்

எந்த ஓர் இயற்கை நிகழ்வையும் இது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்டு, ஆராய்ந்து, பரிசோதனை செய்து, பல முறை சரிபார்த்து, துல்லியமாக இதனால்தான் ஏற்படுகிறது என்கிற முடிவை எட்டுவதுதான் அறிவியல் வழிமுறை. ஒருகாலத்தில் பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று கருதிவந்தனர். ஆனால், அது சரியல்ல என்று நினைத்த சில விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, சூரியனைத்தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்கிற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருதுகோள் இப்போது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இன்று இது சரியா, தவறா என்று ஆராயத் தேவையில்லை. அதேநேரம் யாரோ ஒருவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. சரி, உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். உங்களுக்குச் சிறுவர்களைவிட, சிறுமியர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று தோன்றுவதாக வைத்துக்கொள்வோம்.

அதை நீங்கள் ஆராய்ந்து, பரிசோதனை செய்து, நிரூபித்து உங்கள் கருத்து சரிதான் என்பதை வெளிப்படுத்த வேண்டும். எப்படி? முதலில் ஒரே வயதுடைய சிறுவர்கள் 5 பேரையும் அதே வயதுடைய சிறுமியர் 5 பேரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தினமும் அவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில், ஒரே மாதிரியான உணவை வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவை, எடை போட்டுக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பத்து நாள்களுக்குப் பிறகு நீங்கள் இதுவரை குறித்து வைத்த குறிப்புகளை அட்டவணை போட்டு, வரிசைப்படுத்த வேண்டும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக, சிறுவர்களைவிடச் சிறுமியர் குறைவாகச் சாப்பிடுகிறார்கள் என்று முடிவு வருகிறது.

ஆனாலும் உங்களுக்கு நீங்கள் செய்த பரிசோதனையில் திருப்தி வரவில்லை. மீண்டும் இதே பரிசோதனையை, வேறு சிறுவர், சிறுமியரை வைத்து, 10 நாள்கள் நடத்த வேண்டும். முடிவைக் குறித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் வேறு சிறுவர், சிறுமியரை வைத்து இதே பரிசோதனையை நடத்த வேண்டும்.

மூன்று பரிசோதனை முடிவுகளையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். மூன்று பரிசோதனைகளிலும் சிறுமியரைவிடச் சிறுவர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்கிற முடிவு வந்தால், அது சரியான முடிவாக இருக்கலாம். இன்னும் எளிதாகப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால், 4 தக்காளி அல்லது பச்சைமிளகாய் விதைகளை எடுத்து ஒரே நேரத்தில் வெவ்வேறு தொட்டிகளில் போடுங்கள். 2 தொட்டிகளை வெயிலிலும் 2 தொட்டிகளை நிழலிலும் வைத்து, தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள்.

ஒவ்வொரு நாளும் வெயிலில் இருக்கும் செடிகளையும் நிழலில் இருக்கும் செடிகளையும் கவனித்து, வளர்ச்சியைக் குறித்துக்கொண்டு வாருங்கள். ஒரு மாதத்தின் முடிவில் இரண்டு முடிவுகளையும் வைத்து, சரிபாருங்கள். நிழலில் வளரும் செடிகளைவிட, வெயிலில் வளரும் செடிகள் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் நன்றாக இருந்தால், செடிக்குச் சூரிய வெளிச்சம் அவசியம் என்கிற முடிவுக்கு வந்துவிடலாம் அல்லவா! இந்த இரண்டு உதாரணங்களில் சாப்பாடு விஷயத்தில் இன்னொருவர் பரிசோதனை செய்யும்போது முடிவு வேறு மாதிரிகூட வரலாம்.

ஏனென்றால் சில உணவு வகைகளைச் சிலருக்குப் பிடிக்கும், சில உணவு வகைகளைச் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், செடி விஷயத்தில் யார் செய்தாலும் முடிவு ஒன்றாகத்தான் வரும். ஏனென்றால் செடி வளருவதற்குச் சூரிய வெளிச்சம் அவசியம் என்பது அது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.

அறிவியல் வழிமுறை என்றால் கேள்வி கேட்பது, பரிசோதனை செய்வது, பரிசோதனையின் தரவுகளைச் சரிபார்ப்பது, தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே! எதையும் கேள்வி கேளுங்கள்! அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டுக்கே! அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கே!

பிப்.28 – இன்று – தேசிய அறிவியல் நாள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.