குவாஹாட்டி: அசாமின் மத்திய பகுதியில் நேற்று அதிகாலை 2:25 மணிக்கு 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
மத்திய அசாமில் பிரம்மபுத்ரா தெற்கு கரையில் உள்ள மோரிகாவ்ன் மாவட்டத்தில் (குவாஹாட்டிக்கு கிழக்கே 52 கி.மீ. தொலைவில்) 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களிலும் பிரம்மபுத்ராவின் வடக்கு கரையில் உள்ள பல்வேறு இடங்களிலும் நன்கு உணரப்பட்டது.
மேலும் மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய அண்டை மாநிலங்களிலும் வங்கதேசம், பூடான் மற்றும் சீனாவின் சில இடங்களிலும் நிலநடுக்கத்தை உணரமுடிந்தது.
நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் காத்திருந்தனர்.
நிலநடுக்கத்தால் யாரும் காயம் அடைந்ததாகவோ, சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.