மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 சதவீத நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்ற புறக்கணிப்பால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் அதிகளவில் நீதிமன்றம் செல்லவில்லை. அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்றனர். முன்னதாக மதுரை அமர்வின் பிரதான வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லம் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் பேசும்போது, இதுவரை நடந்த நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது. அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். இதுவரை பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மனு கொடுத்து வருகிறோம்.
இதுவரை நீதிபதி பதவி வகிக்காத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் வகுப்புகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் குறிப்பாகத் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.