துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது.
அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வரும் 2ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அல்லது சதம் அடித்தால் மாபெரும் சாதனை ஒன்றை படைப்பார். அதாவது, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில் இந்திய வீரர் ஷிகர் தவான் தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் என ஆறு முறைக்கு மேல் 50+ ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப்பட்டியலில் ஷிகர் தவான் முதல் இடத்திலும், இவரை தொடந்து கங்குலி (தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள்) 2ம் இடத்திலும் உள்ளனர். தற்போது விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 50 ரன்களுக்கு மேல் ஆறு முறை எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு அரை சதம் எடுத்தால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.